Tamilnadu

தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கில் இருந்து மீண்டது கடலூர் : இயல்பு நிலை திரும்பியது!

சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட மழை வெள்ளநீர் கடலூர் மாவட்டத்தின் தென்பெண்ணை ஆற்றின் வழியே கடலில் சென்று கலக்கும் நிலையில் சாத்தனூரில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில் பெய்த கனமழை நீர் என கலந்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் விளைவாக கடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதி மற்றும் நகர பகுதிகளில் உள்ள நகர்கள் என கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வெள்ள நீர் சூழ்ந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இது குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிட்டு, மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அவ்வகையில், படகுகள் மூலம் நீர் சூழ்ந்ததால் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு நகரின் பிற பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, உணவு வழங்கி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, கடலூர் புதுச்சேரி சென்னை செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ள நீர் அதிகமாக கடந்து சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக வெள்ள பாதிப்பில் இருந்து மீண்ட கடலூர் தற்போது இயல்பான நிலைக்கு திரும்பி உள்ளது.

சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைத்து முற்றிலும் குறைக்கப்பட்டதால் நகர மற்றும் ஒன்றிய பதிவில் சூழ்ந்து இருந்த வெள்ள நீர் வடிவ தொடங்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அதே வேளையில் ஊராட்சி மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் முழு வீச்சில் களத்தில் இறக்கப்பட்டு துப்புரவு பணியை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல் மக்களுக்கு நோய் தொற்று ஏதும் ஏற்படாத வண்ணம் வெள்ள நீரால் சேர்ந்த குப்பை குளங்களை அப்புறப்படுத்தி, கிருமி நாசினியை தூவி வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் - புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தடை பட்டிருந்த போக்குவரத்து, சரி செய்யப்பட்டு இன்று (டிசம்பர் 4) காலை முதல் வழக்கம்போல் வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. வெள்ளநீர் பாதிப்புக்கு உள்ளான கடலூர் மாவட்ட மூன்று ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் இயங்கக்கூடிய பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: “எடப்பாடிக்கு குறை கூற எவ்வித உரிமையும் இல்லை!” : அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!