Tamilnadu

“Admin தாங்க பதிவிட்டது” - 2018-ம் ஆண்டு வழக்கில் எச்.ராஜாவுக்கு 1 வருட சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு!

பாஜகவில் தற்போது தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருக்கும் எச்.ராஜா சர்ச்சை கருத்துகளை பேசுவதில் முதலாலாக விளங்கி வருகிறார். அதிலும் சர்ச்சையாக கருத்து பேசுவது, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுவதுமாக இருந்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் எச்.ராஜா தற்போது குற்றவாளி என்று நிரூபனமாகியுள்ளது.

அதாவது பாஜக நிர்வாகி எச்.ராஜா, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம், 'பெரியார் சிலையை உடைப்பேன்' என்றும், ஏப்ரல் மாதம் திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பல்வேறு கண்டனங்களை எழுப்பியதோடு, இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தது.

இதனிடையே பெரியார் சிலை குறித்த பதிவு நீக்கப்பட்டது. இருப்பினும் கனிமொழி எம்.பி. குறித்த விமர்சனத்துக்கு ஈரோடு நகர காவல்துறையும், பெரியார் சிலை உடைப்பு குறித்த கருத்துக்கு ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் காவல்துறையும் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த பதிவை தான் பதிவிடவில்லை என்றும், தனது அட்மின் தான் பதிவிட்டதாகவும் எச்.ராஜா மலுப்பலாக பதிலளித்தார். இவரது மனு மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் இரண்டு வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்குகள் விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடைபெற்றது. பல்வேறு வாதங்களுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14-ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இன்று (டிச.02) இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், எச்.ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்குகள் தொடர்பான 41 பக்க தீர்ப்பில், எச்.ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கபட்டுள்ளது.

எனவே அவரை குற்றவாளி என தீர்மானிப்பதாகவும், இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பபட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனை எச்.ராஜா அனுப்பவில்லை என்பதற்கு எந்த ஆதாரங்களும் குற்றவாளி தரப்பில் இருந்து தாக்கல் செய்யவில்லை என்றும், எனவே எச்.ராஜா குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த 2 வழக்குகளிலும் எச்.ராஜாவுக்கு தனித்தனியாக 6 மாதம், அதாவது 1 வருட சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயவேல் தீர்ப்பளித்தார்.

Also Read: தொடர் கனமழை... தென் மாவட்டங்களுக்கு செல்லும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - என்னென்ன ரயில்கள் ரத்து?