Tamilnadu

தமிழ்நாட்டு மக்களின் அன்பை பெற்ற துணை முதலமைச்சர் : உதயநிதி ஸ்டாலின் குறித்து ஒரு தொகுப்பு!

கலைஞரின் கரம்பற்றி - தலைவர் அவர்களின் அன்பைப்பெற்று, நிர்வாகிகளுடன் இணைந்து, சிறுவயதிலிருந்தே கட்சிப்பணிகளைச் செய்தவர் என்றாலும், 2018-ஆம் ஆண்டில் முழுமையாக நேரடி அரசியல் களத்துக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடெங்கும் சுற்றிச்சுழன்று தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தலைமைக்கழகம் மற்றும் மாவட்டக் கழகங்களின் அன்பைப்பெற்று, தி.மு.கவின் எஃகு கோட்டையான இளைஞர் அணிக்குச் செயலாளராக 2019-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை எதிர்த்து இளைஞரணி சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார் . குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரானப் போராட்டக்களத்திலும் ஈடுபட்டார்.

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, "விடியலை நோக்கி தலைவரின் குரல்" என்று தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 6 மாத காலத்துக்கு மேல் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

2021 தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்,

தி.மு.க இளைஞர் அணிச் செயலாளராக - சட்டமன்ற உறுப்பினராக ஆற்றியப்பணிகள் – கற்றுக்கொண்ட படிப்பினைகள் – அமைச்சராக மக்கள் பணியாற்றுவதற்கான பாதையை அவருக்கு அமைத்துக் கொடுத்தன.

2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.

தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டுத் துறையின் மூலமாக இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல உலகின் கவனத்தை ஈர்த்தார் உதயநிதி ஸ்டாலின்.

2024 மக்களவைத் தேர்தலில் `இந்தியா கூட்டணி’ சார்பில், தமிழ்நாடெங்கும் 23 நாட்கள், 9 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து 130-க்கும் அதிகமான கூட்டங்களில் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்தார். தமிழ்நாடு- புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றது.

தி.மு.க இளைஞரணிச் செயலாளராக, சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவையொட்டி, இளைஞரணி சார்பில், "என் உயிரினும் மேலான" பேச்சுப்போட்டியை தமிழ்நாடு முழுவதும் நடத்தி மூலம் நூறு இளம் பேச்சாளர்களை கண்டறிந்து அவர்களை திராவிட இயக்க சொற்போர் வீரர்களாக உருவாக்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராக இருந்து இளைஞர்களை ஈர்த்தும், அவர்களை திராவிடக் கொள்கை கொண்டோராகக் கூர் தீட்டியும் வருகிறார். அவரது செயல்பாடுகள் தி.மு.கவின் வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

2024 செப்டம்பர் 28-ம் தேதி தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்களின் உள்ளக் கிடக்கையையும் உணர்வையும் புரிந்துகொண்டு, அனைத்துத் தரப்பு தமிழ்ப் பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் செயலாற்றி வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Also Read: ”காவல்துறையினருக்கு சமூக நீதி பார்வை வேண்டும்! - திமுக அரசு பக்கபலமாக இருக்கும்!” : முதலமைச்சர் உரை!