Tamilnadu
”புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலடி!
ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் வேண்டும் என்றே பழிவாங்கி வருகிறது. ஜி.எஸ்.டி வரி தொடங்கி கல்வி திட்டங்கள் என பல திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் நிறுத்திவைத்துள்ளது மோடி அரசு.
அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டதை அடுத்து ஒன்றிய பட்ஜெட்டில் கூட தமிழ்நாட்டின் பெயரை இடம் பெறாமல் பார்த்துக் கொண்டது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் ஒன்றிய அரசு நடந்து வருகிறது.
தற்போது PM SHRI திட்டத்தில் கையெழுத்திட்டால்தான் “சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய முதல் தவணையான ரூ. 573 கோடியை விடுவிப்பேன் என ஒன்றிய அரசு அடம்பிடித்து வருகிறது.
மேலும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், “சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.573யை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதற்கு எக்காரணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து பேட்டி கொடுத்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, " கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்கிறார் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர். ஆனால் கல்வியில் அரசியல் செய்வது அவர்கள்தான். தாய் மொழியைதான் நாங்கள் ஆதரிக்கிறோம் என்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் அறிக்கையின் மூலமே அறியலாம்.
குறிப்பாக அறிவியல் நூல்களையும் தொழில் சார்ந்த நூல்களையும் பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வழங்கும் திட்டத்தையும் நாம் செயல்படுத்தி வருகின்றோம். இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் வழியாக நமது மொழி உரிமையை பாதுகாத்து வருகின்றோம். அண்ணா அவர்களின் இரு மொழிக் கொள்கைதான் நாம் பின்பற்றி வருகின்றோம். இதுபோன்ற வரலாறுகள் நமக்கு இருக்கும் நிலையில் ஒன்றிய அமைச்சர் தாய்மொழி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. நிதியை நிறுத்துவதன் வழியாக 15000 மேற்பட்ட ஆசிரிய பெருமக்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்துகின்றது ஒன்றிய அரசு.
புதிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தர முடியும் என்று என்னிடம் நேரடியாகவே தெரிவித்தார் ஒன்றிய கல்வி அமைச்சர். எக்காரணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமிழ்நாடு அரசு இல்லை. கொள்கையை விட்டுக் கொடுத்து நிதியை பெற வேண்டிய தேவையும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
இது போன்ற சிக்கல்களை ஒன்றிய அரசு ஏற்படுத்தினாலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு இதை எல்லாம் முறியடித்து தொடர்ந்து கல்வியில் சாதனை புரியும். கல்வியில் என்றும் நாங்கள் அரசியல் செய்ய விரும்புவதில்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!