Tamilnadu

எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது? : அமைச்சர் கே.என்.நேரு கேள்வி!

இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு,தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரிக்கரை மற்றும் ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகளின் கரையொரம் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் ஆகியோர் பனை விதைகள் நடும் பணி துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "மரம் வளர்ப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பனைமரம் மக்களுக்கு பல்வேறு வகையிலும் பயன்படுகிறது.பனை மரத்திற்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது. எனவேதான் அதிக அளவில் பனை மரங்களை நட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி பனை மரங்கள் தற்போது நடப்பட்டு வருகிறது. பனை மற்றும் தென்னை மரங்களை விதிமுறைகளை மீறி வெட்டுவோர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சி தலைவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வோரு நாளும் எவ்வளவு முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்து குறித்து விரிவாக செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி முதலீடுகளை முதலமைச்சர் ஈர்த்து வருகிறார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது குறித்து பட்டியலிட முடியுமா?." என கேள்வி எழுப்பினார்.

Also Read: ”மணிப்பூருக்காக ஒரு நொடி கூட செலவிடாத பிரதமர் மோடி” : மல்லிகார்ஜூன கார்கே தாக்கு!