Tamilnadu
தமிழ்நாட்டில் டாடா மின்சார வாகன உற்பத்தி ஆலை - செப்டம்பரில் அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்!
2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். இந்த இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும் பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவில் முதலீடு மற்றும் சுமார் 30 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஏராளமான முதலீடுகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் புதிய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் புதிய உற்பத்தி ஆலை அமையவுள்ள நிலையில், இந்த ஆலைக்கு செப்டம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் ஜாகுவார் லேண்ட் ரோவர் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை செயல்படத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு தொழில்வழித்தடத்தில் புதிய ஆலை அமைய உள்ள நிலையில், இந்த ஆலையில் உற்பத்தியாகும் கார்களை சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!