Tamilnadu
சட்டப்பேரவையில் விதிகளை மீறி கடும் அமளி : வெளியேற்றப்பட்ட அதிமுகவினர் - சபாநாயகர் விளக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20 முதல் 29 வரை நாள் ஒன்றுக்கு இரண்டு Session ஆக நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 20) தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.புகழேந்தி உட்பட மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இன்று (ஜூன் 21) இரண்டாம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் மானியங்கள் மீதான விவாதங்கள், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்டவை நடைபெற இருந்தது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்தில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் செய்ய சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்த பிறகும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் விதிகளை மீறி சபாநாயகர் முன்பு அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டத்தை மீறி செயல்பட்ட பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்யப்பட்டதற்கான காரணத்தை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “நடப்பு நிகழ்ச்சிகள் பற்றி பேச உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கேள்வி நேரத்தில் அமலியில் ஈடுபடக்கூடாது என்ற விதி உள்ளது. இந்த விதிமுறைகள் பழனிசாமிக்கு தெரியாதா? முன்னாள் முதலமைச்சராக இருப்பவர் விதிமுறைகளை மீறுவது ஆச்சரியமளிக்கிறது.
அவை முன்னவர் என்கின்ற முறையில் நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை கூட காதில் வாங்காமல் எதிர்க்கட்சி தலைவர் அமளியில் ஈடுபடுகிறார். யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும். தீர்வை தேடுவதற்கு பதிலாக, அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதிலேயே தான் அதிமுகவினர் முனைப்பு காட்டுகின்றனர்." என்றார்.
தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் என பலமுறை வலியுறுத்தினேன். விவாதம் நடத்த வாய்ப்புகள் வழங்கிய பிறகும் வேண்டுமென்றே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இது சட்டத்திற்கு புறம்பானது. அதனால்தான் பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
அவையின் மாண்புக்கு எதிராகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் பதாகைகள் ஏந்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால், இன்று ஒருநாள் மட்டும் அவையில் இருந்து வெளியேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!