Tamilnadu

தங்கப் புதையலுக்கு ஆசைப்பட்டு ரூ.15 லட்சத்தை இழந்த வெங்காய வியாபாரி - சென்னையில் நடந்தது என்ன?

சென்னையை சேர்ந்தவர் ராமஜெயம் (51). கோயம்பேட்டில் வெங்காய வியாபாரம் செய்து வரும் இவருக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ராகுல் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் வியாபாரம் தொடர்பாக அவ்வப்போது போனில் உரையாடியும் வந்துள்ளனர். அந்த சமயத்தில் தனக்கு மைசூர் மஹால் அருகே தங்கப்புதையல் கிடைத்ததாக வியாபார ராமஜெயத்திடம், ராகுல் கூறியிருக்கிறார்.

இதனை கேட்டு ஆச்சர்யப்பட்ட ராமஜெயம், இதுகுறித்து அவரிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்டுள்ளார். அப்போது இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும், இதனை விற்பதற்கு தனக்கு உதவி புரியுமாறும், அதற்கு குறிப்பிட்டு தொகையை கமிஷனாக கொடுப்பதாகவும் ராகுல் கூறியிருக்கிறார். இதனை நம்பிய வியாபார ராமஜெயம், தனக்கு தெரிந்தவர்களிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார்.

அதில் ஒருவர் தங்கம் மதிப்பை சோதனை செய்ய கேட்டபோது, ராமஜெயமும் ராகுலிடம் தங்கத்தின் மாதிரியை (model) கேட்டுள்ளார். பிறகு அதனை சோதனை செய்தபோது, அது உண்மையான தங்கம் என்றும், அதன் மதிப்பு பல லட்சம் என்றும் கண்டறியப்பட்டது. இதையடுத்து தன்னிடம் உள்ள 3 கிலோ தங்கத்தின் முழு மதிப்பு வேண்டாம் என்றும், தனக்கு ரூ.20 லட்சம் மட்டும் போதும் என்றும் ராகுல் கூறியுள்ளார்.

ஆனால் தன்னிடம் இப்போது அவ்வளவு பணமில்லை என்று கூறி பேரம் பேசி, இறுதியில் ரூ.15 லட்சம் தர முடிவு செய்திருக்கிறார் வியாபாரி ராமஜெயம். இதைத்தொடர்ந்து அந்த பணத்தை பெறுவதற்காக ராமஜெயத்தை தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு வர சொல்லியிருக்கிறார் ராகுல். அவர் அங்கே வந்த பிறகு, பணத்தை கொடுத்து, தங்கத்தை பெற்றுள்ளார் வியாபாரி ராமஜெயம்.

3 கிலோ தங்கத்தை குறைந்த பணத்தில் வாங்கிய மகிழ்ச்சியிலேயே அதனை பத்திரமாக வீட்டில் வைத்து, சில நாட்கள் கழித்து விற்க சென்றுள்ளார். அப்போது அந்த தங்கத்தை சோதனை செய்தபோது, அது முழுவதும் போலி என தெரியவந்துள்ளது. இதையடுத்து ராகுலுக்கு போன் செய்தபோது, அவரது எண் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வியாபாரி ராமஜெயம், இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ராகுலின் சிம் கார்டில் உள்ள முகவரியான கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியில் சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் சென்னையில் வேலை செய்து வருவதாகவும், அவரது முகவரியும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், ராகுலை சென்னையில் வைத்து கைது செய்தனர். அவரிடம் பணம் குறித்து விசாரித்ததில், அந்த பணத்தை தான் செலவழித்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது சிறையில் இருக்கும் ராகுலிடம், ராமஜெயத்தின் மீதி பணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்கப் புதையலுக்கு ஆசைப்பட்டு ரூ.15 லட்சத்தை வியாபாரி ஒருவர் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "அண்ணாமலை எங்களை மதிக்கவில்லை... பாஜகவிற்கு தேர்தல் பணி செய்யமுடியாது" - பாமக அறிவிப்பு !