Tamilnadu

திருவண்ணாமலை - மக்கள் கடலில் நீந்தியபடி வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள், தான் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஊரிலும் காலையில் நடை பயிற்சியுடன் மக்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், இன்று காலையில், திருவண்ணாமலை, தேரடி வீதியில் நடைபயணமாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

"ஒரு திருக்குறள், வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று" - அதாவது, “ஒரு செயலைச் செய்யும் பொழுதே மற்றொரு செயலையும் நிறைவேற்றிக் கொள்வது ஒரு கும்கியானையைக் கொண்டு, வேறொரு யானையைப் பிடிப்பது போன்றது" என்கிறது இந்தத் திருக்குறள்.

முதலமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை நகரில் நடைபயிற்சி மேற்கொண்டதுடன், தேரடி வீதியில் திரண்டிருந்த மக்கள் கடலில் நீந்தியபடியே திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கு வாக்குச் சேகரித்த காட்சி இந்தத் திருக்குறளை நினைவுபடுத்துகிறது.

தேரடி வீதியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர் திரு.எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் திரு.கு.பிச்சாண்டி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.சி.என்.அண்ணாதுரை முதலியோர் உடன் சென்றனர்.

அங்கு முதலமைச்சர் அவர்களைத் திடீரெனக் கண்ட பொதுமக்கள் அருகிலிருந்து கடைகளில் மாலை, பூக்கள், கைத்தறி ஆடைகள், புத்தகங்கள் முதலியவற்றை வாங்கி வந்து அவரிடம் தந்து, வாழ்த்துப் பெற்றனர். அத்துடன் தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு தங்களுடைய மனப்பூர்வமான ஆதரவையும் தெரிவித்தனர்.

முதலமைச்சர் அவர்களைக் கண்ட மகளிர் பலர் மிகுந்த மகிழ்ச்சியோடு அவர் அருகில் சென்று வணங்கினர். உதயசூரியனுக்கே தங்களுடைய வாக்கு என்று கூறியதுடன் டெல்லியிலும் உங்கள் ஆட்சிதான் அமையும் என்று கூறி மகிழ்ந்தனர். சீருடையில் அங்கே சென்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் முதலமைச்சர் அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் ஓடிவந்து வணங்கினர். அவர்களை முதலமைச்சர் அவர்களும் வணங்கி நீங்கள் எல்லோரும் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

முதலமைச்சர் அவர்களுடைய இன்றைய நடைபயணத்தின் போது ஓடிவந்த சிறுவர், சிறுமியர்களைப் பார்த்து அருகில் நிறுத்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட காட்சி காண்போரை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. பொதுமக்கள், அப்பொழுது முதலமைச்சர் அவர்களிடம் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாகத் தந்தனர். சிலர் வாய்மொழியாகவும் சில கோரிக்கைகளைக் கூறினர். அவற்றை எல்லாம் நிறைவேற்றித் தருவதாக முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி தந்தார்கள். இளைஞர்களும், பெண்களும் முதலமைச்சர் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

வாக்குச் சேகரித்தபடி சென்ற முதலமைச்சர் அவர்கள் அங்கிருந்த இஞ்சி டீ கடைக்குச் சென்றார். அந்தக் கடைக்காரர் ஓடிவந்து முதலமைச்சர் அவர்களை வரவேற்று நாற்காலியில் அமருமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது அவரிடம், தங்களுக்குத் தேநீர் எப்படி வேண்டும் என்று கேட்டு அதன்படி இஞ்சி டீ தயார் செய்து கொண்டு வந்து கொடுத்த காட்சியைப் பொதுமக்கள் எல்லோரும் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது தேநீர் கடைக்காரர், எங்களுடைய கடைக்கு முதலமைச்சர் அவர்கள் வருகை தந்தது நாங்கள் எங்கள் வாழ்வில் செய்த புண்ணியம், இந்த நாள் எங்களுக்கு மறக்க முடியாத பொன்னாள் என்று கூறி எங்களுடைய வாக்கு பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம், கல்லூரி மாண ணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டம், மகளிர்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் முதலான சிறப்பான பல திட்டங்களை நிறைவேற்றி மக்களைக் காத்துவரும் தங்களுக்குத்தான் எங்களுடைய வாக்குகள்.

இப்படி பல்வேறு நல்ல பல திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் உங்களுடைய ஆட்சி தமிழ்நாட்டில் மேலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். தமிழ்நாட்டு மக்கள் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைவார்கள். தாங்கள் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்துகள் கூறிப் பெருமிதம் அடைந்தனர்.

முதலமைச்சர் அவர்கள் இன்றைய நடை பயிற்சியின்போது திருவண்ணாமலை தேரடி வீதியில் பிரம்மாண்டமான திருவண்ணாமலை கோயில் கோபுரத்தின் முன்புறம் பொதுமக்கள் திரண்டு கூடி நின்று அவரை வரவேற்ற காட்சி ஒரு மாபெரும் பேரணி போல் தோன்றியது. இந்தக் காட்சி கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் இந்தியா கூட்டணி பெறவிருக்கும் மாபெரும் வெற்றியை அறிவிப்பது போல் அமைந்து அனைவர் நெஞ்சிலும் அளவிடமுடியாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

Also Read: ”தமிழ்நாட்டை நினைத்துத் தூக்கத்தை தொலைத்துவிட்டார் மோடி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!