Tamilnadu

”வன்னியர் மக்களை ஏமாற்றும் அன்புமணி ராமதாஸ்” : காடுவெட்டி குரு மகள் விமர்சனம்!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாசிச பா.ஜ.கவுடன் பா.ம.க கூட்டணி வைத்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்களது சுயநலத்திற்காகவே பா.ஜ.கவுடன் பா.ம.க சேர்ந்துவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகளே தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் போய் பாஜகவில் இணைந்து கொள்ள வேண்டியது தானே? ஏன் வன்னியர் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? என காவெட்டி குரு மகள் ஆவேசமாக கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த காடுவெட்டி குரு மகள் குரு.விருதாம்பிகை, "ராமதாஸ் தன்னுடைய அன்பு மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் தந்தையும், மகனும் பா.ஜ.கவில் இணைந்து கொள்ள வேண்டியதுதானே?. ஏன் வன்னிய மக்களை ஏமாற்றுகிறீர்கள்?

சமூக நீதி மற்றும் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக இருக்கும் பா.ஜ.க உடன் பா.ம.க கூட்டணி வைத்துள்ளது சுயநலம் மிக்கது. சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக்காகப் பா.ம.க குரல் கொடுத்து வந்தது. ஆனால் இப்போது சுயநலத்துடன் இதற்கு எதிராக க இருக்கும் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருக்கிறது பா.ம.க. இந்த முடிவு பல பா.ம.க நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சமூக மக்களுக்கு நலம் செய்யும் கட்சிகளுக்குத் தேர்தலில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து பாமக கூட்டணியைத் தமிழக அரசியல் களத்திலிருந்து அகற்றுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடும் பா.ஜ.க : தட்டிக்கேட்கும் இடத்தில் இந்தியா கூட்டணி!