Tamilnadu

”மாநில மொழிகளில் போட்டி தேர்வுகளை நடத்த வேண்டும்” : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் MP வலியுறுத்தல்!

இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

இன்று மக்களவையில் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு நடப்பதை தடுக்க வழிவகுக்கும் மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய கதிர் ஆனந்த், "போட்டித் தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்பட்டால் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறையும். தற்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தும் முறை அதிகமாக உள்ளது. இதில் மாற்றம் வேண்டும். மாநில மொழிகளில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

யு.பி.எஸ்.சி, ரயில்வே தேர்வுகளுக்கு போதிய பயிற்சியை இந்திய அரசு வழங்குவதில்லை. தமிழ்நாடு அரசு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்குகிறது. நேர்முகத் தேர்வு செல்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்குகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”வெள்ள நிவாரண நிதி - ஒரு பைசாகூட வழங்காத ஒன்றிய அரசு” : மக்களவையில் ஆ.ராசா MP ஆவேசம்!