Tamilnadu

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டு : 10 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்!

தமிழ்ச் சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழாவின்போது, தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் புலப்படுத்தும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. தமிழர்தம்வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திடும் வகையில் “அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி110-ன் கீழ் 21.4.2022 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில் ஏறுதழுவுதல் போட்டிகளுக்கென ஒருபிரம்மாண்டமான அரங்கத்தினைக் கட்டுவதற்காக ரூ.62 கோடியே 78 இலட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

இந்நிலையில் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஏறுதழுவுதல் போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் நான்கு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது.

இதில், 10 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பிடித்தார். அதேபோல், சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் மற்றும் விளாங்குடியைச் சேர்ந்த பரத்குமார் ஆகியோர் தலா 6 காளைகளை பிடித்து இரண்டாம் இடத்தை பிடித்தனர். இதையடுத்து முதலிடம் பிடித்த அபிசித்தருக்கு முதலமைச்சர் சார்பில் ரூ. 1 லட்சம் மற்றும் மஹிந்திரா தார் ஜீப் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கும் பிரிசுகள் வழங்கப்பட்டது.

Also Read: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் : ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்!