Tamilnadu

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் : ஜனவரி 19 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை !

15வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில போக்குவரத்து சங்கங்கள் இன்றிலிருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன இதையடுத்து பொதுமக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் போக்குவரத்தைச் சீராக இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நேற்றிலிருந்தே சில போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருந்தும் மக்கள் எவ்விதமான சிரமங்களைச் சந்திக்காத வகையில் நேற்று 98%க்கும் மேல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதனால் வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், வெளியூர் செல்பவர்கள் என அனைவரும் வழக்கம்போல் பேருந்துகளில் மகிழ்ச்சியாகப் பயணம் செய்தனர். குறிப்பாக வேலை நிறுத்தத்திற்கான அறிகுறியே இல்லாத வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பண்டிகை காலங்களில் இந்த போராட்டம் தேவையா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அ.தி.மு.க உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் அறிவித்தனர். பின்னர் ஜனவரி 19ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Also Read: 2வது நாளாக முழுமையாக பேருந்துகள் இயக்கம் : அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் பயணிக்கும் மக்கள்!