Tamilnadu
2 நாள் உலக முதலீட்டாளர் மாநாடு : தமிழ்நாட்டிற்கு ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளைக் கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2030க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 ஆகிய இரண்டு தேதி உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரையாற்றுகிறார்.
மேலும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜவுளி, காலணி தொழில்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம், வேளாண்மை தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் 2 நாட்களும் நடத்தப்பட உள்ளன. பெருந்தொழில்களுக்கு மட்டுமல்லாமல், சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றிற்கும் தனி அமர்வுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Also Read
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!