முரசொலி தலையங்கம்

8 மாதமாக எரியும் மணிப்பூர் - எட்டிக்கூட பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி : முரசொலி வேதனை!

எட்டு மாதங்களாக எரிகிறது மணிப்பூர். 2024 ஆம் ஆண்டும் தொடங்கிவிட்டது என்பதுதான் வேதனைக்குரியது ஆகும்.

8 மாதமாக எரியும் மணிப்பூர் - எட்டிக்கூட பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி : முரசொலி வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மீண்டும் மணிப்பூர்!

முரசொலி தலையங்கம் (05-01-2023)

2023 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி அன்று தொடங்கியது, மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை. சில மாதங்களுக்கு முன்னால் லேசாக அடங்கி இருந்தது. இதோ 2024 ஆம் ஆண்டும் தொடங்கிவிட்டது.

கடந்த டிசம்பர் 25ஆம் தேதி காலையில் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இன மக்கள் அதிகம் வாழும் காங்போக்பி மாவட்டத்தில் ஜூபி எனும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். புத்தாண்டு தினமான ஜனவரி 1 ஆம் தேதியன்றும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்துள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டார்கள். ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். தெளபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங், பிஷ்னுபூர் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

எட்டு மாதங்களாக எரிகிறது மணிப்பூர். 2024 ஆம் ஆண்டும் தொடங்கிவிட்டது என்பதுதான் வேதனைக்குரியது ஆகும். எட்டு மாதங்களில் ஒரே ஒருநாள்கூட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மணிப்பூர் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 180 பேர் இறந்துள்ளார்கள். எவரொருவர் வீட்டுக்கும் பிரதமர் செல்லவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்றே மூன்று நாட்கள்தான் இருந்தார். ஒப்புக்கு! கணக்குக் காட்ட மட்டும்!

மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் கையாலாகாத்தனத்தை இது வெளிப்படுத்துகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் அலட்சியத்தையும், மெத்தனத்தையும் இது வெளிப்படுத்துகிறது. பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது திறமையின்மையின் சாட்சியாக இருக்கிறது மணிப்பூர். அந்த மாநிலத்தின் முதலமைச்சரான பிரேன்சிங்கைக் கூட அவர்களால் மாற்ற முடியவில்லை. பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களே, பா.ஜ.க. தலைமைக்கு எதிராகக் கருத்துச் சொன்ன பிறகும், அதனை பா.ஜ.க. தலைமையால் செய்ய முடியவில்லை.

அதிகமான நாட்கள் இணையத் தடைகள் விதித்த மாநிலமாக காஷ்மீருக்கு அடுத்தபடியாக மணிப்பூர் மாறியது. இதனால் அப்பகுதியில் நடக்கும் பல வன்முறைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் வெளியே வராமல் மறைக்கப்பட்டுள்ளது.

8 மாதமாக எரியும் மணிப்பூர் - எட்டிக்கூட பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி : முரசொலி வேதனை!

இறந்தவர் உடல்களை வாங்க, உரிமைகோர ஆட்கள் வரவில்லை. இதுதான் துயரங்களிலும் துயரம் ஆகும். வன்முறையில் இறந்த 96 பேரின் உடல்கள் இம்பாலில் உள்ள மாநில மருத்துவக் கல்லூரி, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் சுராசந்த்பூரில் உள்ள மருத்துவமனையில் அப்படியே இருக்கின்றன. இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உடல்களை அடையாளம் காண மருத்துவமனை சவக்கிடங்கிற்குச் சென்று நேரில் பார்வையிட வேண்டும். ஆனால் இப்போது மக்கள் அங்கு செல்ல முடியாததால் இந்த உடல்கள் பல மாதங்களாக அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன.

இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டார்களே! அவர்கள் என்ன ஆனார்கள்? என்பதை சமீபத்தில் பி.பி.சி. செய்தி நிறுவனம் கட்டுரையாக்கி வெளியிட்டு இருந்தது. “நான் முன்பு வாழ்ந்ததைப் போல என்னால் மீண்டும் வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறுவது எனக்கு கடினமாக உள்ளது, மக்களைச் சந்திப்பதற்கு பயமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது. கூட்டத்தைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இனி எந்தப் பெண்ணுக்கும் இப்படி நடக்கக் கூடாது” என்று அந்தப் பெண்கள் சொல்லி இருக்கிறார்கள். இதில் ஒருவர் கல்லூரி மாணவி. இனி கல்லூரிக்கும் செல்ல முடியாது, அனைவரிடமும் பேச முடியாது என்று சொல்லி இருக்கிறார். அதாவது அந்த இரண்டு பெண்களைக்கூட மன அளவில் பா.ஜ.க. அரசுகளால் மீட்க முடிய­வில்லை.

மே மாதம் அவர்கள் நிர்வாணம் ஆக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களை அப்படி அழைத்துச் செல்வதை காவலர்களே கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள். அந்தப் பெண்கள் இரண்டு வாரத்தில் புகார் கொடுத்தார்கள். மே, சூன், சூலை வரை எந்த நடவடிக்கையும் இல்லை. சூலையில் நிர்வாணமாக அழைத்துச் செல்லும் காட்சி வீடியோக்கள் வெளியானது. அதன் பிறகுதான் மணிப்பூரைத் தாண்டி வெளியில் தெரிந்தது. முதன்முதலாக மூன்று மாதம் கழித்து பிரதமர் நரேந்திரமோடி, மணிப்பூர் பற்றி வாய்திறந்து கருத்துச் சொன்னார்.

இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது சி.பி.ஐ. இரு குற்றப்பத்திரிக்கைகளை கவுஹாத்தி சி.பி.ஐ., சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் தாக்கல் செய்தது சி.பி.ஐ. அவ்வளவுதான்!

கடந்த நவம்பர் மாதம்தான் 9 மைத்தி இனக்குழு அமைப்புகளுக்கு ஆளும் பா.ஜ.க. அரசு 5 ஆண்டுகளுக்குத் தடை விதித்தது.மக்கள் விடுதலை ராணுவம் (PLA), புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய விடுதலை

முன்னணி (UNLF), மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA), காங்லீய்பக் மக்கள் புரட்சிகர கட்சி (PREPAK), காங்லீய் பக்கம்யூனிஸ்ட் கட்சி (KCP), கே.ஒய்.கே.எல்., கோர்கோம், ஏ.எஸ்.யூ.கே -ஆகிய 9 அமைப்புகளை ஒன்றிய அரசு தடை செய்தது.

8 மாதமாக எரியும் மணிப்பூர் - எட்டிக்கூட பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி : முரசொலி வேதனை!

இவர்கள் இன்னமும் மணிப்பூர் பிரச்சினையின் உண்மையான காரணத்தைச் சொல்ல விரும்பவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வழக்கம் போல் இது அன்னியச் சதி என்ற பல்லவியைப் பாடுகிறார். “மணிப்பூர் ஒரு எல்லைப்புற மாநிலம். மணிப்பூர் வன்முறையில் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கின்றனர்” என்று சொல்லி இருக்கிறார். எல்லாவற்றுக்கும், வெளிப்புறச் சதிதான் இவர்களுக்குத் தெரிந்த ஒரே காரணம்.

மிசோரம் மாநிலத்தில் பா.ஜ.க. அடைந்த தோல்வியை, மணிப்பூர் மாநில வன்முறைக்குக் கிடைத்த தண்டனையாகவே பார்க்க வேண்டும். அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தது மிசோ தேசிய முன்னணி. பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சி இது. பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பிரச்சார மேடையில் ஏற மாட்டேன் என்று முதலமைச்சர் ஜோரம் தங்கா சொன்னார். இந்நிலையில் மொத்தமுள்ள 40 இடங்களில் பா.ஜ.க. 23 இடங்களில் மட்டும் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகளின் படி ஆளும் மிசோ தேசிய முன்னணி 40 இடங்களில் 10 இடங்களில் மட்டுமே வென்றது. 23 இடத்தில் போட்டியிட்ட பா.ஜ.க. 2 இடங்களில் மட்டுமே வென்றது. ஜோரம் மக்கள் இயக்கம் என்ற கட்சி 27 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. மணிப்பூர் பிரச்சினையை சரியாகக் கையாளாததால் பா.ஜ.க. இங்கு தோல்வியைத் தழுவியது. பா.ஜ.க.வுடன் தேர்தலுக்கு முன்பு வரை இருந்த மிசோ தேசிய முன்னணி ஆளும் தகுதியை இழந்தது. தகுதியற்றவர்களால் ஆளப்பட்டால் மக்கள் உடலும் மனமும் எரிந்து கொண்டே இருக்கத்தான் வேண்டும் என்பதற்கு மணிப்பூர் சாட்சியாக அமைந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories