Tamilnadu

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அதன் வசதிகள் என்ன ?

முத்தமிழறிஞர் கலைஞரால் சென்னை நகரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை நகரின் மையமாக கோயம்பேடு மாறிய நிலையில், முக்கிய பண்டிகை நாட்களில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்துக்கு “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கவுள்ளார்.

இந்த பேருந்து நிலையத்தில் 1200 மீட்டர் தூரம் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தினந்தோறும் 2310 பேருந்துகளை இயக்கும் அளவு பிரமாண்டமான முறையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறைக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் மக்களுக்குத் தேவையான உணவு வசதி, மருத்துவம் மற்றும் மருந்தக வசதி, ஓட்டுநர் நடத்துநர்களுக்கு ஓய்வறை, தீயணைப்புத் துறை வாகனங்கள், புறக்காவல் நிலையம், குடிநீர், கழிப்பிட வசதி, மின்சார வசதி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது,

பிரதான முனையத்தில் 130 அரசு பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகள் பயன்படுத்தும் வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளுக்கு என்று தனியே 5 ஏக்கர் பரப்பளவில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம், போக்குவரத்து கழகங்களுக்கான பணிமனை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடித்தளத்தில் 260 கார்கள், 568 இரு சக்கர வாகனங்கள், 2வது அடித்தளத்தில் 84 கார்கள், 2 ஆயிரத்து 230 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: 3 சுற்று.. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உடல் !