Tamilnadu

மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்தவர் விஜயகாந்த் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தவர் விஜயகாந்த். பின்னர் 2005ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்தார். பிறகு 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஷ்தை பெற்றது. இதனால் 2011 -2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

இதையடுத்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் குறைத்துக் கொண்டார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார். இதனைத் தொடர்ந்து மறைந்த விஜயகாந்த் அவர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி :

"விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களை கவர்ந்தது. விஜயகாந்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவுகூர்கிறேன்."

ராகுல் காந்தி :

"சினிமா மற்றும் அரசியலுக்கு விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

"சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டின் பொதுவாழ்விற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தேமுதிக கட்சியைத் தொடங்கி அதனை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக வளர்த்து எடுத்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்தேமுதிக தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்."

சி.பி.ஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன்

"தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிய பண்பாளர் விஜயகாந்த். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். சகோதர பாசத்துடன் உபசரித்து உற்சாகப்படுத்துபவர். அவரது உடல் பாதிப்பு அவரது அரசியல் மற்றும் பொது வாழ்வுக்கு பெரும் சவாலானது. அதனையும் மன வலிமையோடு, மருத்துவ சிகிச்சை பெற்று, எதிர்த்து போராடி வந்த விஜயகாந்த் காலமானார் என்பது தாங்கவொணா வேதனையளிக்கிறது."

Also Read: என் நண்பன் வாழ்க்கையை இயற்கை எடுத்துக் கொண்டது : விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!