Tamilnadu

ஹலோ நான் CM பேசுறேன்.. களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : ரிப்பன் பில்டிங் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு!

சென்னையில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்குக் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

உடனே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியை வேகப்படுத்தினர். அதேபோல் போக்குவரத்து போலிஸாரும் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர், பொது மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மழைநீர் தேங்கிய இடங்களுக்குச் சென்று இரவு முழுவதும் ஆய்வு செய்தனர். புயல் வேகத்தில் அரசு நிர்வாகத்தை முடக்கி விட்டனர்.

இந்த துரித நடவடிக்கையால் இன்று காலை சாலையில் தேங்கி இருந்த பல்வேறு இடங்களில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. அதேபோல் சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டு வழக்கம்போல் வாகனங்கள் சீராக இயக்கி வருகிறது. 20 சுரங்கப் பாதைகளில் ஒரே ஒரு சுரங்கப்பாதையில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கும் தண்ணீர் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இதனால் மக்கள் நிம்மதியுடன் இருந்து வருகின்றனர். மேலும் புகார் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பிறகு மக்கள் கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Also Read: புயல் வேகத்தில் செயல்படும் அரசு நிர்வாகம் - உடனுக்குடன் வெளியேற்றப்படும் மழைநீர் : மக்கள் நிம்மதி!