Tamilnadu
“பாஜக ஆட்சியில் தொழில் நுட்பத்தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைகிறது..” - சு.வெங்கடேசன் MP கிண்டல் !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது. இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஒன்றிய அரசின் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவை மையத்தில் இந்தி திணிப்பு நடைபெற்றுள்ளது.
முன்னர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவை மையத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகள் இடம்பெற்ற நிலையில், தற்போது அதில் இந்தி மொழியில் மட்டுமே சேவை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக புதிய சிலிண்டர்களை புக் செய்வதில் பிரச்னை எழுந்திருப்பதாக மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவையில் தமிழ் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் நேற்று கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ”இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தம். இந்தி மட்டுமே இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? விதிகளை மீற உத்தரவிட்டது யார்? உடனடியாக தமிழ் சேவையை உறுதிப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது சமையல் எரிவாயு முன்பதிவில் தமிழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி-யின் கடிதத்திற்கு பதிலளித்து வருத்தம் தெரிவித்து ஐ ஓ சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது பின்வருமாறு :
“இண்டேன் சமையல் எரிவாயு பதிவுக்கான ஐ.வி.ஆர்.எஸ் இணைப்பில் இருந்த மாநில மொழிகள் தொடர்புக்கான தெரிவு நீக்கப்பட்டு இருந்தது. தொடர்பு கொண்டால் இந்தி மொழி சேவை மட்டுமே கிடைத்து வந்தது. சாமானிய மக்கள் வீட்டில் சோறு பொங்க இந்தி கற்றுக் கொண்டா வர முடியும்? இது அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் தலைமை பொது மேலாளர் எனக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், “தற்போது இப் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர். “இந்தியன் ஆயில் நிறுவனமான நாங்கள் நவம்பர் 1, 2023 முதல் ஏர்டெல்லிருந்து ஜியோவிற்கு மாறியதால் எங்கள் IVRS (இன்டர்ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்) – 7718955555 சிஸ்டத்தில் மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது என்பதை எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்காலிகமாக நிகழ்ந்த இந்த மாற்றத்தின்போது எங்களது சிஸ்டத்தில் உங்களுக்கு விருப்பமான மொழி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தேர்வுகளை மட்டுமே நீங்கள் பெற முடிந்தது. இது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிகிறோம். இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வுக் காணப்பட்டுவிட்டது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன், இந்த சேவை மாற்றத்தின் செயலாக்கத்தினால் உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்வதுடன் எங்கள் சேவைகளின் மீது நீங்கள் வைத்துள்ள இடைவிடாத நம்பிக்கைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக ஆட்சியில் தொழில் நுட்பத்தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்புதான். எப்படியோ இன்னொரு இந்தித் தடங்கல் நீங்கியுள்ளது என்பது மகிழ்ச்சிதான். விழிப்போடு இருப்போம். மொழி உரிமை காப்போம்.”
Also Read
-
சென்னையில் தவறாமல் செல்ல வேண்டிய இடம்... நவீன வசதியுடன் பசுமை பூங்கா... திறந்துவைத்தார் துணை முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மேலும் 37.79 இலட்சம் மக்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல்!
-
முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மாளிகை, புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
-
“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!