Tamilnadu

கொடிக்கம்பம் விவகாரம் - அரசியல் ஆதாயம் தேடலாம் என வெறியோடு அலையும் அண்ணாமலை : சிபிஐ முத்தரசன் கண்டனம்!

கொடிக்கம்பம் விவகாரத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, அமைதியை சீர்குலைக்கும் வாய்ச்சவடால் மூலம் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் உள்ள பங்களாவில் குடியேறியுள்ளார். அவரது பங்களா இருக்கும் தேசிய

நெடுஞ்சாலையில் அரசின் அனுமதி பெறாமல், பா.ஜ.கவினர் 60 அடி கொடிக்கம்பம் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொடிக் கம்பம் நடப்படும் இடத்திற்கு அருகில், உயர் அழுத்த மின் பாதை செல்வதால் விபத்து ஏற்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு கொடிக்கம்பம் போடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான புகார் காவல்துறையின் கவனத்துக்கு சென்ற பின்னர், காவல் துறை கொடிக்கம்பத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, பாஜகவினர் கலகத்தில் ஈடுபட்டு பெரும் ரகளை செய்துள்ளனர்.

பொது மக்களின் ஆதரவுடன் அமைய வேண்டிய கொடிக்கம்பம் போடும் அரசியல் நிகழ்வை, மதவெறியூட்டும், பகை அரசியல் வளர்க்கும் வன்மத்துடன் பாஜக அணுகியுள்ளது. இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய கட்சியின் தேசியத் தலைவர் நான்கு உறுப்பினர் குழு அமைத்திருப்பது அச்சுறுத்தல் நடவடிக்கையாகும்.

மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, அமைதியை சீர்குலைக்கும் வாய்ச்சவடால் மூலம் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார். ஊருக்கு, ஊர், தெருவுக்கு, தெரு என யாருக்கு எதிராக, எதனைக் காரணமாக்கி, கலகம் உருவாக்குவதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என வெறியோடு அலையும் பாஜகவின் மலிவான செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: தோல்வி பயம் : MP-களை சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவித்த பாஜக - தெலங்கானாவில் பரிதாபம் !