Tamilnadu
நடிகை ஜெய பிரதாவுக்கு சிறை.. ரூ.20 லட்சம் டெபாசிட்.. 15 நாட்களுக்குள் சரணடைய சென்னை நீதிமன்றம் உத்தரவு !
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் ஜெய பிரதா. ஆந்திராவை சேர்ந்த இவர், 1974-ல் தெலுங்கில் அறிமுகமாகினார். பின்னர் 1975-ல் கமல் நடிப்பில் வெளியான 'மன்மத லீலை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி, கன்னடம் என படங்களில் நடித்து வந்தாலும், தமிழில் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
80-90 களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த இவர், கடந்த 2008-ல் கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான 'தசாவதாரம்' படத்தில் சிங்கின் மனைவியாக நடித்துள்ளார். பெரும்பாலும் தெலுங்கு படத்திலேயே நடித்து வந்த இவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதன்படி 1994 -ம்ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர், பின்னர் சந்திரபாபு நாயுடு தலைமையில் கட்சி செயல்பட தொடங்கிய பிறகு அதில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
அதில் இணைந்த இவர், உத்தர பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று எம்.பியாக பதவி வகித்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, 2011-ல் ராஷ்ட்ரிய லோக் மஞ்ச் என்ற கட்சியை தொடங்கினார்.
அப்போது 2012-ல் நடைபெற்ற தேர்தலில் இந்த கட்சியை சேர்ந்த ஒருவரும் வெற்றிபெறவில்லை என்பதால், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியில் 2014-ல் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் 2019-ல் பாஜகவில் இணைந்துகொண்டார். இதனிடையே ஜெய பிரதாவின் சகோதரர்கள் ராஜ்பாபு ராம் குமார் ஆகியோருடன், சென்னை அண்ணாசாலை சத்தியமூர்த்தி பவன் அருகே `ஜெயப்பிரதா, ராஜ்' என இரண்டு தியேட்டர்களை நடத்தி வந்தார்.
இந்த சூழலில் இந்த தியேட்டரில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் சம்பளத்தில் இ.எஸ்.ஐ என்று சொல்லப்படும் மருத்துவ காப்பீடுக்காக குறிப்பிட்ட ஒரு தொகையை மாதந்தோறும் பிடித்து வரப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் ஜெயப்பிரதா செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் ஜெய பிரதா மற்றும் அவரது சகோதரர்கள் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது, விசாரித்த நீதிபதி ஜெய பிரதா மற்றும் அவரது சகோதரர்களுக்கு 6 மாதகாலம் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். எழும்பூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஜெய பிரதா தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஜெய பிரதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரித்த நீதிபதி, அந்த மனுவையும் தள்ளுபடி செய்ததோடு, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 6 மாதகால சிறை தண்டனையையும், அபாரதத்தையும் உறுதி செய்து உத்தரவிட்டார்.
மேலும் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெய பிரதா 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும், ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், இந்த தொகையை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!