Tamilnadu

“AVP.ஆசைத்தம்பி மறைந்த போது உடலைப் பார்த்து கதறினார் கலைஞர்” : உருக்கமாக நினைவு கூர்ந்த முதலமைச்சர் !

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களி்ல் ஒருவரான ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் நூற்றாண்டுவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கழகத் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று , ஏ.வி.பி.ஆசைத்தம்பி நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா கண்காட்சியை திறந்து வந்தார்.

பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய விழாப்பேருரை பின்வருமாறு :- “மூத்த முன்னோடிகளைப் போற்றுவது என்பது அவர்களது புகழைப் பரப்புவதற்காக மட்டுமல்ல - இவர்களைப் போல வருங்கால சமுதாயத்திலும் ஆற்றல் மிக்க ஆசைத்தம்பிகள் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விழாக்களை நடத்துகிறோம்.

ஒரு காலம் வரும் நாம் சட்டமன்ற உறுப்பினர் ஆவோம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஆவோம் - என்றெல்லாம் யாரும் கணக்குப் போடாத காலத்தில் திராவிட இயக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் ஆசைத்தம்பி அவர்கள்.

இந்த ஆண்டு நூற்றாண்டு விழாக் கொண்டாடுகிறோம் என்றால் - நம்முடைய தலைவர் கலைஞரும் ஆசைத்தம்பி அவர்களும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். கலைஞரை விட ஐந்து மாதம் இளையவர் ஆசைத்தம்பி அவர்கள். 1938 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களை இந்தி எதிர்ப்புப் போராட்டம் திருவாரூர் வீதியில் தமிழ்க் கொடி தாங்கி போராட வைத்ததோ அதே ஆண்டில் திராவிட இயக்க எண்ணத்தால் தீவிரமாக உருவானவர் தான் ஆசைத்தம்பி அவர்கள்.

அவருடைய தந்தையார் பழனியப்பன் அவர்கள் - விருதுநகர் மாவட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். விருதுநகர் என்பதே நீதிக்கட்சியின் கோட்டையாக இருந்த நகரம் ஆகும். அங்கிருந்து உருவானவர் தான் நம்முடைய ஆசைதம்பி அவர்கள். பள்ளிப் பருவ காலத்திலேயே திராவிட இயக்க மாணவர்களை இணைத்து சங்கம் தொடங்கி மேடைகளில் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

* பேரறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு -

* சி.பா.ஆதித்தனார் நடத்திய தமிழன் - போன்ற இதழ்களில் இளமைக் காலத்திலேயே எழுதத் தொடங்கினார்.பிற்காலத்தில் 'தனி அரசு' என்ற இதழையும் நடத்தினார். முதலில் வார இதழாக வந்தாலும் - சில ஆண்டுகள் நாளிதழாகவும் வந்தது. திமுகவின் தினத்தந்தி என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது ஆசைத்தம்பியின் தனியரசு நாளிதழ்.

பேரறிஞர் அண்ணா- தலைவர் கலைஞரைப் போல ஏராளமான கதைகள் - நாவல்கள் எழுதினார். நாற்பதுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் எழுதி இருக்கிறார். கதைகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியவர் அவர். பராசக்தி என்பது தலைவர் கலைஞர் எழுதிய திரைக்கதை என்பதை அனைவரும் அறிவீர்கள். அந்த பராசக்தி கதையில் வரும் பாத்திரங்களை வைத்தே 'கசந்த கரும்பு' என்ற கதையை எழுதியவர் ஆசைத்தம்பி.

* திராவிடர்கள்

* திராவிடர் இயக்கம் ஏன்?

* தனியரசு ஏன்?

* காந்தியார் சாந்தியடைய... போன்ற அவரது கட்டுரை நூல்கள் அந்தக் காலக்கட்டத்தில் திராவிட இயக்கத்தவர்களை உணர்ச்சி வசப்படுத்திய படைப்புகள் ஆகும். அதிலும் குறிப்பாக காந்தியார் சாந்தியடைய என்ற புத்தகம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணல் காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட வேதனையில் எழுதப்பட்ட மிகச்சிறிய புத்தகம் அது. கோட்சே என்ற கொடியவனை மனதில் இருக்கும் மதவாதத்தைக் கண்டித்து அந்த நூல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் வகுப்புவாதத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி அந்த நூலை அன்றைய அரசு தடை செய்யது. ஆசைத்தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் - 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், அன்றைய தினம் கழகத்தின் அமைப்புக்குழுச் செயலாளராக இருந்த என்.வி.நடராசன் அவர்களிடம் இந்த வழக்கை கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

வழக்கு நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பாக நிதி திரட்டும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வந்தன. முதல் ஆளாக 50 ரூபாய் நிதி வழங்கினார் அண்ணா அவர்கள். ஆசைத்தம்பிக்கு பிணை கிடைத்தது. சிறையில் இருந்து அவரை விடுவிப்பதற்கு முன்னதாக கட்டாயப்படுத்தி அவருக்கு மொட்டை அடித்தது சிறைத்துறை. நிர்வாணம் ஆக்கினார்கள். பின்னர் கட்டிக் கொள்ள கோவணம் தரப்பட்டது. துறையூரைச் சேர்ந்த புத்தக வெளியீட்டாளர்களான தங்கவேல், கலியபெருமாள், ஆகியோருடன் சேர்த்து ஆசைத்தம்பிக்கும் மொட்டை அடிக்கப்பட்டது.

இது கழகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் கோபப்பட வைத்தது. மொட்டை அடிக்கப்பட்ட இந்த மூவர் படத்தையும் பேரறிஞர் அண்ணா அவர்கள், தனது திராவிட நாடு இதழில் வெளியிட்டார். நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் - கோவில்பட்டியில் நடந்த கழக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய கலைஞர் அவரகள்?

'சிறைச்சாலை என்ன செய்யும்?' என்ற சுந்தராம்பாள் பாட்டை பாடிக் காட்டினார். பாடிக்காட்டி விட்டு - சிறைச்சாலை என்ன செய்யும் தெரியுமா? மொட்டை அடிக்கும் என்று முழங்கினார்.

அந்தக் காலத்தில் திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட புத்தகங்கள் ஏராளமாக தடை செய்யப்பட்டன. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் நூல் தடை செய்யப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை தடை செய்யப்பட்டது. புலவர் குழந்தையின் இராவண காவியம் தடை செய்யப்பட்டது.

கலைஞரின் நாடகங்கள் - எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் தடை செய்யப்பட்டன. அந்த வரிசையில் ஆசைத்தம்பியின் காந்தியார் சாந்தியடைய நூலும் தடை செய்யப்பட்டது. கழகத்தைச் சேர்ந்த அனைவர்க்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கட்டளையை பிறப்பித்தார்.

'எந்த புத்தகத்தை தடை செய்கிறார்களோ - அந்த புத்தகத்தை பொது இடத்தில் விளக்கு கம்பத்தில் நின்று கொண்டு கூட்டமாக படியுங்கள்' என்று அண்ணா அவர்கள் கட்டளையிட்டார்கள்.

கூட்டம் கூட்டமாக நமது தொண்டர்கள், அந்த புத்தகங்களைப் படித்தார்கள். இலங்கையில் இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார்கள். மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இது இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

அப்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் எஸ்.சி.மணி, பி.மணி, ராஜா ஆகிய மூன்று கழகத் தொண்டர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்கள். பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை நூலையும்- ஆசைத்தம்பியின் காந்தியார் சாந்தியடைய என்ற நூலையும் விற்றார்கள் என்று கைது செய்யப்பட்டார்கள்.

வண்ணாரப்பேட்டையில் நின்று கொண்டு அஞ்சாமல் முழக்கம் போட்டுள்ளார்கள் இந்த மூவரும். அத்தகைய வண்ணாரப்பேட்டையை உள்ளடக்கிய வடசென்னைப் பகுதியில் தான் இன்றைய தினம் ஆசைத்தம்பிக்கு நூற்றாண்டு விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதை விட அவருக்கு பெருமை இருக்க முடியாது.

அவருடைய புத்தகம் விற்றதால் 1950 ஆம் ஆண்டு கைது செய்தார்கள். இன்று நாம் ஆட்சிக்கு வந்து அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி ஆகும். திராவிட இயக்கத் தீரர்களுக்குக் கிடைக்கும் பெருமையும் ஆகும். இத்தகைய அடக்குமுறையைப் பற்றியோ - கைது செய்யப்படுவதைப் பற்றியோ - சிறைச்சாலை சித்திரவதைகள் பற்றியோ ஆசைத்தம்பி எந்தக் காலத்திலும் கவலைப்பட்டவரல்ல.

மிசாவில் எங்களோடு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். மொத்தம் 24 முறை இனம் மொழி நாடு காக்க போராடி சிறை சென்றவர் ஆசைத்தம்பி அவர்கள். எப்போதுமே தனது மனதில் பட்டதை யாருக்கும் தயங்காமல் வெளிப்படையாகப் பேசுவர் தான் ஆசைத்தம்பி அவர்கள்.அன்றைய நீதிக்கட்சி தலைவர்களின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்பதையும் மேடைகளில் பேசி இருக்கிறார்.

பேரறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு' இதழில் 'ஜஸ்டிஸ் கட்சிக்கு புதிய அமைப்பு வேண்டும்' என்று 1943 ஆம் ஆண்டு கட்டுரை தீட்டியவர் ஆசைத்தம்பி அவர்கள். இதை வைத்துப் பார்த்தால் 'திராவிடர் கழகம் ' என்ற அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தவரே ஆசைத்தம்பி அவர்கள் தான் என்று சொல்லலாம்.

1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது - தலைவர் கலைஞர் அவர்கள் பொறுப்பு வகித்த கழகப் பிரச்சாரக் குழுவில் ஆசைத்தம்பி அவர்களும் இடம் பெற்றார்கள்.

விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக தனது மக்கள் பணியைத் தொடங்கினார். கழகம் போட்டியிட்ட 1957 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் 15 தொகுதிகளை வென்றோம்.அந்த 15 பேரில் ஆசைத்தம்பி அவர்களும் ஒருவர். ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். (ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்றவன் தான் நான்!) 1967 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

இதில் என்ன சிறப்பு என்றால் இரண்டு தேர்தலிலும் அந்தக் காலத்தில் செல்வாக்காக இருந்த இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர் ஆசைத்தம்பி அவர்கள். ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக - அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் வெங்கடசாமி போட்டியிட்டார். அவரை ஆசைத்தம்பி தோற்கடித்தார்.

அதே போல் எழும்பூரில் அன்றைய அமைச்சர் ஜோதி வெங்கடாசலம் போட்டியிட்டார். அவரை ஆசைத்தம்பி தோற்கடித்தார். 7 நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் ஒரே ஒருவர் வெற்றி பெற்றார். அது ஆசைத்தம்பி அவர்கள் மட்டும் தான். கழகத்தில் ஒரு எம்.பி.என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை நிரூபித்தார் ஆசைத்தம்பி.

அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் ஆசைத்தம்பி. நாடாளுமன்றத்தில் இறுதி உரை ஆற்றும் போது - இந்தியாவை ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்றிவிடாதீர்கள் என்று முழங்கியவர் ஆசைத்தம்பி அவர்கள். ஒற்றை மொழி - ஒற்றை மத நாடாக மாற்றிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்தார். அவரது நாடாளுமன்ற உரைகளில் இன்னொன்றையும் வலியுறுத்தி இருக்கிறார். தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால் அதற்குக் காரணம் பெரியார் இயக்கம் ஆகும். எனவே வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங்குங்கள் என்றும் ஆசைத்தம்பி அவர்கள் பேசி இருக்கிறார்.

திமுகவில் இருந்தாலும் திக மீது அதிகமான பற்றுக் கொண்டவர் ஆசைத்தம்பி அவர்கள். திமுக - திக ஆகிய இரண்டு இயக்கங்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தியது. அனைவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் வைக்கப்பட்டார்கள். காலையில் அனைத்து கைதிகளையும் நிற்க வைப்பார்கள்.

திமுகவினர் தனியாகவும் - திகவினர் தனியாகவும் நின்றுள்ளார்கள். ஏன் இப்படி பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள் என்று தலைவர் கலைஞர் அவர்கள் - ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கேட்டுள்ளார். ஜெயிலர் தான் நிற்கச் சொன்னார் என்று ஆசிரியர் சொல்லி இருக்கிறார். ஆசைத்தம்பி எங்கே நிற்கிறார் என்று தலைவர் கலைஞர் கேட்டிருக்கிறார்... திராவிடர் கழக வரிசையில் நின்று கையை தூக்கி இருக்கிறார் ஆசைத்தம்பி. அந்தளவுக்கு பெரியார்வாதியாக இருந்ததால் தான் வாலிப பெரியார் என்றே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அத்தகைய ஆசைத்தம்பியை அந்தமானில் நாம் இழந்தோம். தமிழ்நாட்டுக்கு வெளியில் வாழும் தமிழர்களைக் கவனிக்கும் பொறுப்பை பேரறிஞர் அண்ணா அவர்கள் - ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களுக்குத் தான் வழங்கினார்கள். அந்த வகையில் தான் அந்தமானுக்கும் சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

களைப்பாக இருக்கிறது - கண்ணைக் கட்டுவது போல இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். மூளையில் இரத்தக் குழாய் வெடித்து அங்கேயே இறந்தும் போனார். அவரது உடலை அங்கிருந்து எடுத்து வருவதற்கே பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அவரது உடலைப் பார்த்து கதறினார் தலைவர் கலைஞர் அவர்கள்.

ஏனென்றால் தனது இறுதி உரையில் கூட, கலைஞர் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தான் பேசி இருக்கிறார் ஆசைத்தம்பி. தனது இறுதி உரையில், 'திராவிட இயக்கம் துவங்காமல் போயிருந்தால் கேட்பாரற்ற அனாதைகளாக ஆகியிருப்போம்' என்று சொன்னவர் ஆசைத்தம்பி அவர்கள். இது தான் அவரது மரண சாசனம் ஆகும்.

அந்தக் கூட்டத்தில் ஆசைத்தம்பியை பலரும் புகழ்ந்து பேசினார்கள். இறுதியாக இவர் சொன்னார்: 'இவை எதுவும் எனக்கு கிடைத்த புகழ் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் இருப்பதால் கிடைத்த பெருமையாகும்' என்று சொன்னவர் அவர்.கழகத்தின் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமான சொற்கள் இவை.

ஆசைத்தம்பி பற்றி நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் சொன்னார்கள்... '' கலைஞரின் நெஞ்சில் வேல்பாய்ந்தால் அந்த வேலை எடுத்து எதிரியின் நெஞ்சிலே பாய்ச்சும் வீரம் கலைஞருக்கு உண்டு. கலைஞரின் முதுகில் யாராவது வேல் பாய்ச்சிவிடக் கூடாது என்று காத்தவர் ஆசைத்தம்பி" -என்று சொன்னார் இனமானப் பேராசிரியர் அவர்கள்.

இது தான் ஒவ்வொரு தொண்டரின் இலக்கணம் ஆகும்.கொள்கைக்கும் - செயலுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களைப் போற்றுவோம்! ஆசைத்தம்பி மறைந்த போது தலைவர் கலைஞர் அவர்கள் உருக்கமான எழுதினார்கள்...

'என் அன்பே! ஆசைத்தம்பி!

நீ மறையவில்லை.

மறைய மாட்டாய்.

உன்னையும் உன் உறுதியையும்

நாங்கள் மறக்க மாட்டோம்" -

என்று சொன்னார் கலைஞர் அவர்கள்.

ஆசைத்தம்பி அவர்களை நாம் மறக்கவில்லை-

அவரது உறுதியை மறக்க முடியாது - என்பதன் அடையாளமாகத்தான்இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். வாலிபப் பெரியார் ஆசைத்தம்பி அவர்களின் புகழ் வாழ்க வாழ்க என்று கூறி விடை பெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது விளையாட்டுத்துறை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!