Tamilnadu

“உலகத்துக்கே வழிகாட்டுகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..” - சபாநாயகர் அப்பாவு புகழாரம் !

சென்னை கலைவானர் அரங்கத்தில் காலநிலை மாற்றம் குறித்தான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி பட்டறை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, காலநிலை மாற்றத்தை, அடுத்த 10 ஆண்டுகளில் கட்டுப்படுத்த தமிழகத்தில் 33% காடுகள் வளர்க்க வேண்டும் என முதலமைச்சர் ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்பாவு பேசியதாவது, "உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தபட்சம் 33% காடுகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் 23% காடுகள் மட்டுமே இருந்து வருகிறது. அதனால் தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் 33% காடுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதற்காக முதலமைச்சர் தலைமையில் 26 பேர் கொண்ட நிர்வாக குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் 33% காடுகள், இயற்கை வளங்கள் கொண்ட மாநிலமாக உருவாக்குவோம் என்ற அடிப்படையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமம், பஞ்சாயத்து தோறும் ஒரு வனம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

மேலும், வீடுகள் கட்டும் பொழுதும் ஒவ்வொரு வீட்டிற்கும் தனியாக சோலார் உற்பத்தி செய்யலாம் என்றும், மரங்கள் வனத்துறை மூலம் குறைந்த உயரத்தில் வளர்த்தி வழங்கப்படுகிறது. அதனை மாற்றி உயரமாக வளர்த்து அதன் பின் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் இது குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதனை பரிசீலித்து நடைமுறைப்படுத்தப்படும்.

இந்தியாவின் முன்னோடி மாநிலமாக வருவதற்கு முன்னெடுத்து இருக்கக்கூடிய இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து பயிற்சி பட்டறை வழங்கப்படுகிறது. இதன் மூலமாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கவனத்திற்கு வந்தால் தான் சாமானிய மக்களுக்கும் இந்த திட்டம் கொண்டு சேர்க்க முடியும் என்ற அடிப்படைநில் எம்எல்ஏ-க்களுடன் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மேரும், திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் பரிசு பொருட்களாக வருங்காலத்தில் மரக்கன்றுகளை தர வேண்டும். இதனை எம்எல்ஏ-க்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு தடை என்பதை தமிழகம் மட்டும் முன்னெடுத்து செயல்படுத்தி விட முடியாது, அனைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட்டால் தான் முடியும்.

1975ல் குடும்ப கட்டுப்பாடு திட்டம் இந்தியா முழுவதும் கொண்டுவரப்பட்டது. அதில் தென் மாநிலங்கள் முழுவதும் வெற்றி பெற்றது. குறிப்பாக தமிழகம் அதில் முதலிடமும் பெற்றது. தமிழகம் தற்போது மக்கள் தொகையை குறைத்துள்ளது. அதனால் ஒன்றிய அரசிற்கு ரூ.100 கொடுத்தால், ரூ.17 ரூபாய் மட்டுமே தமிழக அரசு திரும்ப தருகிறது. ஆனால் வட மாநிலங்களில் ரூ.100 வழங்கி ரூ.400-ஐ பெற்று வருகிறார்கள். இந்த வேறுபாடு தொடர்ந்து இருந்து வருகிறது.

இதனால் தொலைநோக்கு திட்டம் கொண்டு வரும் பொழுது நல்லது என்றால் தமிழகம் அதை நல்லதாக நடைமுறைப்படுத்தும். இதில் தமிழகம் தான் முன்னோடி மாநிலமாகவும் இருக்கும். இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு பெரியார் வழியில் சமூக நீதியை நிலைநாட்டி வரும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.

பீகார் புள்ளிவிபரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் 63% உள்ளனர். அதில் பட்டதாரிகள் 2.3% பேர் தான் உள்ளனர். ஆனால், இந்திய அளவில் ஆண் பட்டதாரிகள் 36% இருந்தால் தமிழகம் 51% ஆகவும், பெண்கள் இந்திய அளவில் 26% என்றால் தமிழகத்தில் பட்டம் பயின்றவர்களும், பயில்பவர்கள் 72% பேர் உள்ளனர். இதனால் எந்த ஒரு திட்டமும் முன்னெடுத்து நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. மேலும், முதலமைச்சர் தொட்டால் அந்த திட்டம் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே வழிகாட்டும் திட்டமாக நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

Also Read: அரசு வேலை வாங்கி தருவதாக மாணவிகளிடம் பண மோசடி.. பா.ஜ.க பிரமுகருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!