Tamilnadu

“உலகமே வியப்படையும் சாதனை.. இதற்கான பாதையை அன்றே வகுத்தவர் கலைஞர்..” - சபாநாயகர் அப்பாவு புகழாரம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தின் வாயிலாக செய்த சாதனைகளில் ஈர்த்தது என்ற தலைப்பின்கீழ் முதல் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, தமிழ்நாடு சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் சாதனைகளை போற்றும் வகையில் மாணவர்கள் அவரது சாதனைகள் குறித்து விளக்கினர். அப்போது மேடையில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, “தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய சாதனைகள் இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் செய்திருக்க முடியாது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் தான். சமூகத்திற்காக கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றும் மறையாது” என்றார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “சாதி, மத ஆதிக்கத்திற்கு எதிரானது கலைஞர் ஆட்சி. தலைவர் கலைஞர் காலத்தில் மேற்படிப்புக்கு நுழைவுத்தேர்வு வேண்டும் என ஒன்றிய அரசு அப்போது கூறிய போது, அதனை முதல் ஆளாக வேண்டாம் என்றவர் கலைஞர். அவரின் தொலைநோக்கு பார்வையை ஒன்றிய அரசு இன்று பிறப்பித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வுக்கு பூஜ்ஜியம் மார்க் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அப்போதே இதனை வேண்டாம் என்றார் கலைஞர்” என்றார்.

இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு சுதந்திரத்திற்கு முன் இப்படி இல்லை. 111 ஆண்டுகளுக்கு முன் ஐந்தரைகோடி மக்களில் 100 பட்டதாரிகள் மட்டுமே. இதிலிருந்து எப்படி முன்னேறி வந்தோம் என நாம் எண்ண வேண்டும். நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 5 முறை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு பெருமைகள் இருந்தாலும் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய பணிகள் மிக சிறந்தது.

பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்விக்கு செல்லும் முதல் பட்டதாரிக்கு கல்லூரி செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். பெண்களை படிக்க வைத்து, படியேற வைத்தவர் கலைஞர். சாமானிய மக்களும் இன்று பட்டம் படிக்கின்றனர். சமச்சீர் கல்வி, அனைவருக்கும் பட்டப்படிப்பு என்று கொண்டு வந்தவர் கலைஞர்.

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியது என்றால், உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது தான் திராவிட மாடல் அரசு. இதற்கான பாதையை அன்றே வகுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழ், தமிழர் உயர்வுக்காக உழைக்கும் நம் முதல்வர் எல்லோருக்குமான ஆட்சியை நடத்தி வருகிறார். ஜாதி மதம் தவிர்க்க வேண்டும். ஒரே இனம் தமிழ் இனம் என்ற ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

Also Read: காவிரி ஆணைய உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும்.. கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!