Tamilnadu

Google Maps-ல் நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்து குளிக்க சென்றபோது விபரீதம்.. நீரில் மூழ்கி மாணவர் பரிதாப பலி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு கோவை கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆல்வின் ஜோன்ஸ் நண்பர்களுடன் கோத்தகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் நான்கு மாணவர்கள் வார விடுமுறையான இன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளனர். இந்த பகுதி முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ள நிலையில், கோத்தகிரி பகுதிக்கு சுற்றுலா வரும் சில சுற்றுலா பயணிகள் கூகுள் மேப் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் நீர்வீழ்ச்சி கண்டுபிடித்து, அத்துமீறி சுண்டட்டி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் கோவையிலிருந்து நான்கு கல்லூரி மாணவர்கள் சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். இதில் ஆல்வின் ஜோன்ஸ் என்ற மாணவன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் குதித்த ஆல்வின் ஜோன்ஸ் நீச்சல் தெரியாததால் பாறை இடுக்கில் கால் சிக்கி நீரினுள் மூழ்கியுள்ளார். உடனே அருகில் இருந்த சக நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து தண்ணீரில் விழுந்த மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு, உடனே தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து அருகில் இருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரமாக தேடி பார்த்துள்ளனர்.

பின்பு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் சோலூர் மட்ட காவல்துறையினர், வனத்துறையினர் நீரில் மூழ்கிய ஆல்வின் ஜோன்ஸை சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தேடிய பின்பு தண்ணீருக்கு அடியில் சிக்கிய ஆல்வின் ஜோன்ஸ் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

பின்னர் மாணவரின் உடல் மீட்கப்பட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது. சுற்றுலா வந்த இடத்தில் உடன் இருந்த சக நண்பன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சோலூர்மட்டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: கொடநாடு வழக்கு: கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்ற பழனிசாமியின் நண்பர் - அடுத்து சிக்குவது யார்?