Tamilnadu

“மணிப்பூரில் வன்முறை நடக்கதான் செய்யும்” : விஷம கருத்து பரப்பிய பத்ரி சேஷாத்ரி மத்திய சிறையில் அடைப்பு !

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் பத்ரி சேஷாத்ரி (Badri Seshadri). இவர் தற்போது சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார். இவர் ஒரு புத்தக வெளியீட்டாளர் மற்றும் அரசியல் விமர்சகர், நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். அதோடு சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்த சூழலில் கடந்த ஜூலை 22-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், மணிப்பூர் வன்முறை குறித்து பேசினார். அப்போது "மணிப்பூரில் சண்டையும், வன்முறையும், நடக்கும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் என்ன செய்ய முடியும்?, அவர் கையில் துப்பாக்கி கொடுத்து அனுப்பினால், அவரால் மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட முடியுமா ?" என்றெல்லாம் விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், நீதித்துறை தொடர்பான சேஷாத்ரியின் கருத்துகளால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மாவட்டம் காடூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு காவல் நிலையத்தில் இவர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் பத்ரி சேஷாத்ரி மீது IPC 153, 153A உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மங்களமேடு சரக காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன் மற்றும் ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் மனோஜ் ராம்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் குழுவினர் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வித்து அவரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அவரை பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி குன்னம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதையடுத்து குன்னம் நீதிமன்ற நீதிபதி கவிதா, பத்ரி சேஷாத்ரி வரும் 11.08.2023 ம் தேதி வரை இரண்டு வார காலத்திற்கு மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். போலீசார் அவரை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Also Read: மணிப்பூர் விவகாரம் : தலைமை நீதிபதி குறித்து அவதூறு.. பத்ரி சேஷாத்ரி 3 பிரிவுகளில் அதிரடி கைது - பின்னணி ?