Tamilnadu

கேட்பாரற்று கிடந்த 4 பவுன் தங்க நகை.. காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

நாம் ஏதாவது ஒரு பொருளைத் தவறவிட்டுவிட்டால் அது மீண்டும் நமக்குக் கிடைப்பது மிகவும் கடினம். அதிலும் பணம், நகையை நாம் தவறவிட்டால் அவ்வளவுதான் என்று முடிவு செய்துவிட வேண்டும். ஆனால் சில நேரங்களில் நமக்குக் தவறவிட்ட பொருள் கிடைக்கவும் நேரிடும். அப்படிதான் 4 பவுன் தங்க நகையைத் தவறவிட்ட நபருக்கு மீண்டும் அந்த நகை கிடைத்த சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதுரா. இவர் பூந்தமல்லி குமணஞ்சாவடி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் விடுதியிலிருந்து வெளியே வந்தபோது, சாலையில் 4 பவுன் தங்கச் சங்கிலி இருந்துள்ளது. அப்போது சாலையில் யாரும் இல்லை.

பின்னர் அந்த நகையை எடுத்த ஸ்ரீமதுரா, அருகே உள்ள பூவிருந்தவல்லி காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சாலையில் இந்த நகை இருந்ததாக கூறி அதை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து நகையை யார் தவறவிட்டது என்று விசாரணை நடத்தினர்.

இதில் குமணன் சாவடி பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவர்தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் நகையை தவற விட்டார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாரதியைக் காவல்நிலையம் அழைத்த அவர் தவற விட்ட நான்கு பவுன் தங்கச் சங்கிலியை போலிஸார் ஒப்படைத்தனர்.

பிற்கு சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்து உரிமையாளரிடம் சேர்க்க உதவிய இளம் பெண் ஸ்ரீமதுராவுக்கு காவல்துறை அதிகாரி பரிசு வழங்கி பாராட்டினர்.

Also Read: உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' படத்தின் அடுத்த அப்டேட்.. அறிவிப்பை வெளியிட்டது படக்குழு !