Tamilnadu

ஆருத்ரா மோசடியில் தொடர்பு.. வசமாக சிக்கிய ஆர்.கே.சுரேஷ்.. வங்கி கணக்கை முடக்கி போலிசார் அதிரடி !

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஐயப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அதேபோல் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மீட்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ஆர்.கே.சுரேஷின் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பின்னரும் போலிசாரிடம் ஆஜராகாமல் ஆர். கே சுரேஷ் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு போலிசார் மூலம் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இருப்பினும் அவர் நேரில் வராமல் தலைமறைவாக உள்ள நிலையில், தற்போது குற்றப்பிரிவு போலிசார் அவரது வங்கி கணக்குகளை முடக்கி அவருக்கு செக் வைத்துள்ளனர்.

ஆருத்ரா மோசடி புகாரில் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளதால் அவரின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Also Read: குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு : ரூ.11 கோடி வசூல்.. சென்னை மாநகரப் போக்குவரத்து போலிசார் தகவல் !