முரசொலி தலையங்கம்

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது : “ஒரு போர்க் குற்றமாகும்...” - முரசொலி தலையங்கம் கண்டனம்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை, அமெரிக்கா கைது செய்துள்ளது. - முரசொலி தலையங்கம் கண்டனம்.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது : “ஒரு போர்க் குற்றமாகும்...” - முரசொலி தலையங்கம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

10.01.2026

நவீன காலனித்துவ ஆக்கிரமிப்பு!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை, அமெரிக்கா கைது செய்துள்ளது. சங்கிலியால் பிணைத்து, கண்களைக் கட்டி இழுத்து வந்து நியூயார்க் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கும் செயல் இது. நவீன காலனித்துவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை இது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘’வெனிசுலாவில் நடந்துள்ள சமீபத்திய நிகழ்வுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. மாறி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். வெனிசுலா மக்களின் நலன், பாதுகாப்பை உறுதி செய்யும்படி இந்தியா வலியுறுத்துகிறது. அனைத்துத் தரப்பினரும், பேச்சுவார்த்தை மூலம் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. தலைநகர் கரஸ்சில் இருக்கும் இந்தியத் தூதரகம், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

இது மிக மிக மேலோட்டமான அறிக்கை ஆகும். கடுமையான கண்டனத்தை இந்தியா பதிவு செய்திருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் அதிபரைக் கைது செய்து, கடத்திச் சென்று சிறை வைத்திருப்பது சர்வதேசச் சட்டங்களை மதிக்காத, மற்ற நாடுகளை மதிக்காத, மனித உரிமை மீறல் ஆகும்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா. ஜனவரி 2 ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ என்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலமாக வெனிசுலாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா செயல் இழக்கச் செய்தது.

அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலில் வெனிசுலா ஈடுபடுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்த நிலையில், ஜனவரி 3ஆம் தேதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரன்சும் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டுக் கப்பல் மூலம் நியூயார்க்குக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

‘’இந்தத் தாக்குதல்கள் வெனிசுலாவின் மூல வளங்கள்; குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் கனிமங்களைக் கைப்பற்றுவதையும், நாட்டின் அரசியல் சுதந்திரத்தை உடைப்பதையும் நோக்கமாகக் கொண்டவை’’ என்று வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். உடனே அவசரநிலையைச் செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார். ‘’அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களும் சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சூழ்நிலைகளில் செயல்படுத்தப்பட வேண்டும்’’ என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். “நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அவரே உடனடியாக அமெரிக்காவால் கைது செய்யப்பட்டார்.

‘’நான் ஒரு விஷயத்தைத் திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வெனிசுலாவுடன் அமெரிக்கா போரில் ஈடுபடவில்லை. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர், தங்கள் நாட்டுக் குற்றவாளிகளை அமெரிக்காவுக்கு அனுப்புவோர் உடன்தான் போரை நடத்துகிறோம். வெனிசுலாவின் வீழ்ச்சிக்கு அதன் தலைமையே காரணம். பலமுறை எச்சரித்தும் அவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளாததாலேயே இந்த நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தது” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லி இருக்கிறார்.

வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது : “ஒரு போர்க் குற்றமாகும்...” - முரசொலி தலையங்கம் கண்டனம்!

தனது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு மதுரோவிடம் கேட்கப்பட்டபோது, அவர்: “எனது பெயர் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மோரோஸ். நான் வெனிசுலா குடியரசின் ஜனாதிபதி. ஜனவரி 3-ஆம் தேதி முதல் நான் இங்கே கடத்தி வைக்கப்பட்டுள்ளேன்” என்று அறிவித்தார். அமெரிக்க துணை மார்ஷல்கள் அவரை நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் சென்றபோது, மதுரோ ஸ்பானிய மொழியில்: “நான் கடத்தப்பட்ட ஒரு ஜனாதிபதி. நான் ஒரு போர்க்கைதி” என்று முழங்கினார்.

சிலியா புளோரஸுக்கு காயங்கள் இருந்ததாக ‘டெலிகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது. “முகத்தில் காயங்கள் தெரிந்தன. அவரது நெற்றியில் ஒரு கோல்ஃப் பந்து அளவிலான வீக்கம் இருந்தது. கன்னங்கள் மற்றும் அவரது வலது கண்ணுக்கு மேல் ஒரு தழும்பு காணப்பட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரது வழக்கறிஞர் மார்க் டோனெல்லி, “கடத்தலின் போது அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட மற்றும் கலைந்த தோற்றத்தில் இருக்கும் மதுரோவின் புகைப்படங்கள் அவரை அவமானப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது, சர்வதேசச் சட்டத்தின்கீழ் ஒரு போர்க் குற்றமாகும். மதுரோவும் அவரது மனைவியும் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் (Metropolitan Detention Center) வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின்னணி என்பது வெனிசுலாவின் எண்ணெய் வளம் தொடர்புடையது என்பதை அனைவரும் அறிவார்கள். உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. வெனிசுலாவின் ஐ.நா. தூதர் சாமுவேல் மொன்கடா, அமெரிக்கா தனது நாட்டின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் வெனிசுலாவைத் தாக்குவதாகக் குற்றம் சாட்டினார். “இது காலனித்துவம் மற்றும் நவீன-காலனித்துவத்தின் மிக மோசமான நடைமுறைகளை மீண்டும் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாகும்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விளக்கமளிக்க அழைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ், இந்தத் தாக்குதலின் உள்ளடக்கத்தை விளக்கினார். 2002-இல் அமெரிக்க ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, 2014-இல் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதியுதவி அளித்தது, எண்ணெய் உற்பத்தியை 75 சதவிகிதமும், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) 62 சதவிகிதமும் வீழ்ச்சியடையச் செய்த கடுமையான பொருளாதாரத் தடைகள், 2019-இல் ஜுவான் குவைடோவை இடைக்கால ஜனாதிபதியாக ஒருதலைப்பட்சமாக அங்கீகரித்தது மற்றும் வெனிசுலாவின் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான அரசுச் சொத்துகளைக் கைப்பற்றியது ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

வெனிசுலா மீது அமெரிக்கா தொடுத்துள்ள தாக்குதலானது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அப்பட்டமாக மீறி, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

banner

Related Stories

Related Stories