Tamilnadu

கொடநாடு வழக்கு : பழனிசாமியின் பாதுகாவலர் அளித்த ‘பகீர்’ வாக்குமூலம்.. விசாரணை வளையத்தில் சிக்கிய சசிகலா !

கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர்.

முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு சோலூர் மட்டம் போலிஸார் தொடக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போதைய நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்த முரளி ரம்பா தலைமையில் சோலூர் மட்டம் போலிசார் முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் 2020- ஆம் ஆண்டு தமிழக காவல்துறை நீலகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனி படை போலிஸ் விசாரணைக்கு மாற்றியது. அதன் பின்னர் தனிப்படை போலிஸார் கடந்த ஓராண்டாக ஜெயலலிதாவின் தோழியும் கொடநாடு எஸ்டேட் ஒரு பங்குதாரருமான சசிகலா, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேர் உட்பட 316 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டதால் தனிபடை போலிசாரிடமிருந்து வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவினர் பெற்று கொண்டனர். அதனையடுத்து சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி முகமது ஷகில் அக்தர் தாலைமையிலான 10-க்கும் மேற்பட்டோர் கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களா மற்றும் கொலை நடந்த இடங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின் போது, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இரவு காவலாளி ஓம் பகதூரை தலை கீழாக கட்டி வைத்த மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றி இருப்பதும் கதற்கு பதிலாக மரக்கன்றை அதே இடத்தில் நட்டு வளர்த்து வருவதும் தனிபடை விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மறைந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜ், எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலராக இருந்த கனகராஜ் என்ற காவல்துறை அதிகாரி நூற்றுக்கும் மேற்பட்ட முறை கனகராஜ் இடம் தொலைபேசியில் பேசியுள்ளது சிபிசிஐடி போலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கனகராஜ் என்பவரிடம் வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலிஸார் சென்னையில் உள்ள ஆவடி ஆயுதப்படை காவல் நிலை அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, தொடர்ந்து இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை முழுவதும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், கனகராஜ் மற்றும் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அதிகாரிகள் பேசிய உரையாடல் குறித்த பதிவுகளை கண்டறிய சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு பதிவுக் கருவி அனுப்பப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலிஸார் தெரிவித்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சென்னையில் உள்ள ஆவடி ஆயுதப்படை காவல் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, எடப்பாடி பகுதியை சேர்ந்த ஜோசியர் ஒருவரை விசாரிக்க ஒரு நாட்களில் சம்மன் வழங்கப்பட உள்ளது. இதனுடைய சிபிசிஐடி போலிஸார் இவர்களுக்கு சம்பந்தப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: “கொடநாடு மர்ம மரணங்கள்.. தவறான தகவல்களை சொல்லி வசமாய் சிக்கிய பழனிசாமி” : வெளுத்து வாங்கிய ‘முரசொலி’!