Tamilnadu

“ஆண் நண்பர்களை ஏவி, தன் மீது ஆசிட் வீச சொன்ன பெண்” : போலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் !

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே பெண்மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக கடன் வழங்கியர்களிடமிருந்து தப்பிக்க தனது ஆண் நண்பரை ஏவி ஆசிட் வீச சொன்னது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (46). இவர் சித்திரங்கோடு அருகே அரசி மில் நடத்தி வருகிறார். கடந்த 31ஆம் தேதி லதா தனது மில்லிருந்து உண்ணியூர்கோணம் பகுதியில் பேருந்திலிருந்து வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயமடைந்த லதா வலியால் கதறிய சத்தகம் கேட்டு, அப்பக்கத்தினர் லதாவை மீட்டு குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் காவல்துறையினர் 2 தனிப்படை அமைத்து, குலசேகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர்.

மேலும் போலிஸார் நடத்திய விசாரணையில், லதா மீது சந்தேகமடைந்த போலிஸார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுமார் 35 லட்சம் ரூபாய் கடன் இருந்ததாகவும், கடன் வழங்கியர்களிடமிருந்து தப்பிக்க தனது ஆண் நண்பரான முதலார் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் கிருமாதாஸ் என்பவருடன் சேர்ந்து ஆசிட் வீச்சு நாடகத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆண் நண்பர் முதலார் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் கிருபாதாஸ் (52), அவருக்கு உதவிய ஜெஸ்டின் ராபின் (39), ஷாஜின்(23), அர்ஜூன் குமார் (24) ஆகியோரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க ஆசிட் வீச்சு நாடகத்தில் ஈடுபட்டபெண்ணால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த இளம் பெண்: ஏர்போர்ட் ஊழியர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்!