Tamilnadu

"பேனா சின்னம் பற்றிப் பேச பழனிசாமிக்கு அருகதையே இல்லை".. ஆ.ராசா கடும் தாக்கு!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வீரப்பம்பாளையம் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கழகத் துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய ஆ.ராசா, "மதச்சார்பற்ற இந்தியாவில் தற்போது மோடியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரே மதம், ஒரே மொழி என இந்த நாட்டை மதம் சார்ந்து ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது மோடி அரசு. இந்தியாவில் ஒரு மதச்சார்பற்ற ஆட்சியை மீண்டும் அமையத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார்.

இதனால்தான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை இந்தியாவே உற்றுப்பார்க்கிறது. இந்தியாவைக் காப்பாற்றுகின்ற வல்லமை மிக்க ஒரே தலைவராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். இது தமிழ்நாட்டுக்கான இடைத்தேர்தல் அல்ல அகில இந்தியாவிற்கான தேர்தல்.

கொரோனா காலத்தில் எந்த மாநில முதலமைச்சரோ, பிரதமர் உள்ளிட்ட யாருமே வெளியே வரவில்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்குள்ளே சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நான் இருக்கிறேன் என கூறிய ஒரே முதலமைச்சர் நமது முதலமைச்சர் மட்டும்தான்.

கலைஞரின் பேனா சின்னம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு பேச அருகதையே இல்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைக் கொண்டு வந்ததே முத்தமிழறிஞர் கலைஞர்தான். நூறு ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களை வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறையும் கலைஞரின் பேனாவைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ரெய்டு செய்யும் ஒன்றிய அரசு.. மோடி மீது ப.சிதம்பரம் சரமாரி தாக்கு!