Tamilnadu

இராணுவ வீரர் தாக்கப்பட்டதாக பொய் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி.. கிருஷ்ணகிரி போலிசார் நேரடி விளக்கம் !

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள வேலம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் என்பவர் குடும்பத்துக்கும், அவரது உறவினரான சின்னசாமி என்பவரது குடும்பத்தாருக்கும் இடையே தகறாரு ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் இராணுவ வீரராக உள்ளார். இந்த தகறாரு கடந்த சில தினங்களுக்கு முன்பு கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் ஆத்திரப்பட்ட இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இருதரப்பினரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடுமையான காயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து பிரபாகரன் குடும்பத்தார் சின்னசாமி குடும்பத்தார் மீதும், சின்னசாமி குடும்பத்தார் பிரபாகரன் குடும்பத்தார் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இராணுவ வீரர் பிரபாகரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் பிரபாகரன் குடும்பத்தார் கொடுத்த வழக்கு கொலை வழக்காக மாறியது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த சின்னத்தம்பி உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில், இதுகுறித்து ஹவால்தார் ரகு என்ற ஒருவர் தன்னை இராணுவ வீரர் என்றும், தானும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளாதகவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவிற்கு சம்பவம் நடந்த மாவட்டமான கிருஷ்ணகிரி காவல்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

"1.இந்த வீடியோவில் உள்ள ரகு என்பவரின் மீது ஒரு அடிதடி வழக்கும், கொலை மிரட்டல் வழக்கும் என இரண்டு வழக்குகள் உள்ளது.

2. கடந்த ஜனவரி மாதம் இவர் விடுமுறையில் வந்த போது கலவரத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

3.இவர் மீது மொத்தம் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது.

4.மேலும் இவர் வீடியோவில் பதிவிட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மை இல்லை. இந்த வீடியோவை பதிவிட்ட நபர் மீது சட்டபூர்வமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்று குறிப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .

Also Read: உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு CEO-வாக இருக்கும் இந்தியர்கள்: எந்தெந்த நிறுவனம்? யார் யார்? பட்டியல் இதோ!