Tamilnadu

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : சட்டப்பேரவையில் முதலமைச்சர் சொன்ன 3 புதிய அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து இரண்டு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து இன்றைய சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையளித்து புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

இதன் விவரம் வருமாறு:-

கடந்த இரு நாட்களாக உறுப்பினர்கள் இந்த அவையில் எடுத்து வைத்திருக்கக்கூடிய கருத்துகள் தொடர்பாக நான் அமைச்சர்களோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஆலோசித்தேன். அதனடிப்படையில் சில அறிவிப்புகளை தற்போது நான் வெளியிட விரும்புகிறேன்.

முதலாவதாக, கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், “முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதியத் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

இரண்டாவதாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15-9-2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 இலட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெரும்பாலான பொது மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மூன்றாவதாக ஒரு முக்கியமான அறிவிப்பு. உலக முதலீட்டாளர்கள் மாநாடு. பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது.

முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், நான் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தேன்.

அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த இலக்கினை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் விதமாக, பல முதலீட்டாளர்கள் மாநாடுகளை துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன.

மேலும், உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு, ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கும் அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின்ஆண்டுக் கூட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக, “உலக முதலீட்டாளர்கள் மாநாடு” வரும் 2024 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10, 11 ஆம் நாட்களில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என்பதை இம்மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

Also Read: "10 ஆண்டுகள் தேங்கிக் கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓடவைத்துள்ளோம்"... பேரவையில் முதலமைச்சர் பதிலுரை!