Tamilnadu
“குழந்தைகளை கவனிக்கும் கடமையில் இருந்து தந்தை தப்பிப்பதை பொறுக்க முடியாது..” - சென்னை நீதிமன்றம் கறார் !
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர், சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருச்சியில் உள்ள பெற்றோருடன் 11 மாத குழந்தையுடன் வசித்து வருவதால், தன்னால் திருச்சியில் இருந்து பூந்தமல்லி வந்து செல்ல இயலாது எனக் கூறி, வழக்கை திருச்சிக்கு மாற்றக் கோரி மனைவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையின் போது, 11 மாத குழந்தையின் செலவுகளுக்காக கணவன் எந்த ஜீவனாம்சமும் தரவில்லை என மனைவி தரப்பில் புகார் கூறப்பட்டது. ஆனால், குழந்தையை பார்க்க அனுமதிக்காத நிலையில் எப்படி ஜீவனாம்சம் வழங்க முடியும் எனவும், பல் மருத்துவரான மனைவி பூந்தமல்லி வந்து செல்வதில் எந்த பிரச்னையுமில்லை எனவும் கணவன் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குழந்தையின் கல்வி, வாழ்க்கைக்கு வேண்டிய செலவுகளை மேற்கொள்ள வேண்டியது தந்தையின் கடமை எனவும், கணவரை பிரிந்து வரும் மகளின் குழந்தைகளை கவனிக்க வேண்டிய சுமை தாத்தா - பாட்டிக்கு வந்து விடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை கவனிக்க வேண்டிய கடமையில் இருந்து வருவாய் ஈட்டும் தந்தை தப்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, ஜீவனாம்சம் கோரி மனுத்தாக்கல் செய்யாவிட்டாலும், அதை வழங்கும்படி உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதற்காக ஜீவனாம்சம் வழங்க மறுக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, விவாகரத்து வழக்கை திருச்சிக்கு மாற்றியும், குழந்தைக்கு மாதம் 5 ஆயிரம் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!