Tamilnadu

“நிலத்தை எப்படி வாங்கணும்னு தெரியும்” : வயதான தம்பதியின் தோட்டத்தை அபகரித்த Ex-ADMK அமைச்சர் மீது வழக்கு!

நீலகிரி மாவட்ட மஞ்சூர் அருகே உள்ள மணிக்கல் கிராமத்தை சார்ந்தவர் ராஜு. நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறையில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது மனைவி பிரேமாவுடன் மணிக்கல்லில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப சொத்தில் பிரித்து கொடுக்கபட்டுள்ள 16 சென்ட் நிலத்தை மனைவி பிரேமாவின் பெயரில் பதிவு செய்து அங்கு விளையும் பசுந்தேயிலை மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மஞ்சூரை சேர்ந்தவரும், அதிமுக ஆட்சி காலத்தில் சுற்றுலா துறை மற்றும் உணவு துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் இவர்களது 16 சென்ட் நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டுள்ளார்.

விலை குறைவு என்பதால் ராஜூ மற்றும் பிரேமா ஆகியோர் மறுப்பு தெரிவித்த நிலையில், இவர்களது இடத்தை சுற்றி இருந்த ராஜூவின் சகோதரர்களின் தேயிலை தோட்டங்களை விலைக்கு வாங்கி உள்ளார். அதனை தொடர்ந்து ராஜூவிடம் தொடர்ந்து இடத்தை கேட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 3 மாதங்களாகவே வயதான தம்பதியினருக்கும் புத்தி சந்திரனுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன் இரவோடு இரவாக புத்திசந்திரன் ஏற்கனவே வாங்கி உள்ள இடத்தில் சாலை அமைக்கும் பணி மேற்கொண்ட நிலையில், இரவோடு இரவாக ஜே.சி.பி மூலம் வயதான தம்பதியினரின் 16 சென்ட் இடத்தில் இருந்த தேயிலை செடிகளை அகற்றி ஆக்கிரமிக்க முயன்றதாக கூறபடுகிறது.

அதனை ராஜு உடனடியாக தடுத்து நிறுத்திய நிலையில், ராஜூ தனது மனைவியுடன் மஞ்சூர் காவல் நிலையத்திற்கு சென்று முன்னாள் அமைச்சர் மீது புகார் அளித்தார். மேலும் அதுகுறித்து குந்தா தாலுக்கா அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மஞ்சூர் காவல்துறையினர் பாதிக்கபட்ட வயதான தம்பதியினர் மற்றும் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் ஆகியோரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே அ.தி.மு.க ஆட்சியில் இல்லாத நேரத்தில் புத்தி சந்திரன் அமைச்சர் பதவியில் இல்லாத நிலையில் தன் அமைச்சராக இருப்பதாகவும் நிலத்தை எப்படி வாங்குவது என்று தெரியும் என்று மிரட்டுவதாகவும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகப்பு வேண்டும் என வயதான தம்பதியினர் கோரிக்கை விடுத்த நிலையில்,

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் உணவுத் துறை அமைச்சருமான புத்திசந்திரன் மீது தேயிலை தோட்டத்தை அபகரிக்கும் நோக்கத்தாடு அதனை அழித்து தேயிலை தொழிற்சாலை கட்டும் பணிக்காக இரவோடு இரவாக ஜேசிபி வாகனம் கொண்டு தேயிலை செடிகளை அழித்த குற்றச்சாட்டில் புத்தி சந்திரன் மீது மஞ்சூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: ரூ.33 லட்சம் மோசடி.. அதிமுக முன்னாள் MLA மற்றும் மனைவி - மகள் மீது வழக்குப் பதிவு செய்து போலிஸ் விசாரணை!