Tamilnadu

திடீரென தீப்பற்றி எரிந்த கார்கள்.. பதறிப்போன பொதுமக்கள்.. - போலிஸ் தீவிர விசாரணை : பின்னணி என்ன ?

சென்னையை அடுத்த ஆலந்தூரை அடுத்துள்ளது பழவந்தாங்கல் என்ற பகுதி. இங்கு குமரன் தெரு சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் காந்திமணி, ராஜேஷ்குமார். இவர்களுக்கு சொந்தமான இரண்டு கார் அவர்கள் வீட்டின் முன்பு அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை சுமார் 5 மணியளவில் திடீரென இரண்டு கார்களும் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. தீப்பற்றிக்கொண்டதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனே இது குறித்து உரியவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்க்கையில், கார் மளமளவென பற்றி எரிந்துள்ளது.

இதையடுத்து இது குறித்து தீயணைப்புத் துறைக்கும், காவல் துறைக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து திருவான்மியூர் மற்றும் கிண்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து 2 வண்டிகள் வந்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை; இருந்தபோதிலும் தீ பற்றி எரிந்ததில் இரண்டு கார்களும் முழுவதுமாக கருகின.

இதைத்தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீ பிடித்தது எப்படி என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு இது முன்விரோதம் காரணமாக நிகழ்ந்த சம்பவமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இதற்காக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், திடீரென தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை : மீண்டும் புதுபொலிவுடன் நாளை திறப்பு !