Tamilnadu

"தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்றுவேன்": அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் செய்தியாளர் சந்திப்பு!

தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக இன்று பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து புதிதாக அமைச்சராகப் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அமைச்சராகப் பதவியேற்ற உடனே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன். விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன்.

தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவேன். தேர்தல் அறிக்கையின்படி ஒவ்வொரு தொகுதிக்கும் விளையாட்டு மைதானம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும்.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'மாமன்னன்'தான் எனது கடைசி திரைப்படம். கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்திலிருந்து விலகுகிறேன். இனிமேல் எந்த திரைப்படங்களிலும் நடிக்கப்போவதில்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: புதிய களத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. ஒதுக்கப்பட்ட துறை என்ன தெரியுமா?