Tamilnadu

கள்ளழகர் கோயில் நிலத்தை ரூ.34 கோடிக்கு விற்க முயன்ற பாஜக நிர்வாகி.. அதிரடியாக கைது செய்த போலிஸ் !

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை மேடு வீரப்பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவரது தம்பியான சூரியநாராயணன் என்பவர் அனுப்பும் பணத்தில் நிலங்கள் வாங்கிப்போட எண்ணினார். அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பத்மநாபன் என்பவரை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவர், மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 சென்ட் நிலம் 'ஸ்ரீ நாச்சாரம்மாள்' அறக்கட்டளைக்கு சொந்தமாகதாக உள்ளதாகவும், அதன் நிர்வாகிகளான குழந்தை செல்வம், சந்திரன் தனக்கு பவர் எழுதி கொடுத்திருப்பதாகவும் கூறி, அந்த நிலத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் அவர் இந்த சொத்தின் உரிமையாளர் நேரில் வந்து கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்பேரில் கடந்த (2021) ஆண்டு குழந்தை செல்வம், சந்திரனுடன், சுமதி, அங்குராஜ், பத்பநாபனின் மகனும், கொடைக்கானல் நகர பாஜக தலைவருமான சதீஷ் ஆகியோர் ரங்கநாயகியை நேரில் சந்தித்தனர். அதோடு இந்த ஏக்கர் சொத்தில் எந்த வித சிக்கலும் இல்லை என கூறினார். மேலும் பேசி பேசியே அவரை ரூ.34 கோடிக்கு சம்மதிக்கவும் வைத்தனர். இதனால் ரங்கநாயகியும் அந்த நிலத்தை வாங்குவதற்காக இவர்களிடம் முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.

பின்னர் சில நாட்கள் கழித்து நிலத்தை கிரயம் செய்வதற்காக ரங்கநாயகியிடம் சதிஷ் மற்றும் அவரது தந்தை பத்மநாபன் ரூ.20 லட்சம் என மொத்தம் 70 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். இதையடுத்து அந்த நில ஆவணங்களை ரங்கநாயகி ஆய்வு செய்தபோது, அது மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான இடம் என்று தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தான் கொடுத்த பணத்தை பத்மநாபன் மற்றும் அவரது மகனும், கொடைக்கானல் நகர பாஜக தலைவருமான சதீஷிடம் திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர்களோ திரும்ப கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். மேலும் தான் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி என்றும் கூறி மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், குற்றம்சாட்டப்பட்ட பத்பநாபன், அவரது மகனான கொடைக்கானல் பாஜக தலைவர் சதீஷ், குழந்தை செல்வம், சந்திரன், சுமதி, அங்குராஜ் ஆகிய 6 பேர் மீது காவல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டதால், மதுரையில் பதுங்கியிருந்த இருந்த நகர கொடைக்கானல் நகர பாஜக தலைவர் சதீஷை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாகியுள்ள பத்மநாபன் உள்ளிட்ட 5 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஜெயலலிதா சிலையை அனுமதியின்றி நிறுவ முயன்ற OPS அணி” : சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலிஸ் !