Tamilnadu

குட்கா, கிரானைட் நிறுவனங்களிடம் ₹87.45 கோடி லஞ்சம் பெற்ற விஜயபாஸ்கர்: ஆதாரத்துடன் பதிலளித்த Income tax !

கடந்த 2017 ஆம் ஆண்டு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையின் வரி வசூல் அதிகாரி குமார் தீபக் ராஜ் என்பவரின் பதில் மனுவை அத்துறையின் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாஸ் தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில், 2011-12லிருந்து 2018-19ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு உரிய வருமான வரியை செலுத்தும் படி உத்தரவு பிறப்பித்த போதும், வரி செலுத்தாததால் சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில் 2022-23ஆம் நிதியாண்டில் அரசு, 8 லட்சத்து 50 ஆயிரத்து 226 ரூபாயை செலுத்தி உள்ளதாகவும், அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக பணம் எடுத்துள்ள நிலையில், தொகுதி பணிகளுக்காக எந்த பணத்தை எடுக்கவில்லை என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தவில்லை என்பதால் சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டன எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குட்கா நிறுவனத்திடம் 2 கோடியே 45 லட்சமும், சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்திடம் 85 கோடியே 45 லட்சம் ரூபாய் லஞ்சமாக விஜயபாஸ்கர் பெற்றது உறுதியாகி உள்ளதாக வருமான வரித்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 30 கோடியே 90 லட்சம் ரூபாய் பணத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் ரிசாட்டுக்கும் விஜயபாஸ்கர் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விஜயபாஸ்கருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட பிறகு தான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்திற்குட்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த விஜயபாஸ்கர் முயற்சிப்பதாகவும், வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட அவசியமில்லை என்பதால், விஜபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் தள்ளிவைத்தார்.

2011-2019 ஆம் ஆண்டில் விஜயபாஸ்கரின் குவாரி செலவு மற்றும் வருமான கணக்கு:

குவாரி செலவு மொத்த தொகை - ரூ.664,984,945

குவாரி வருமானம் மொத்த தொகை - ரூ.1,225,808,041

குவாரி ப்ளூமெட்டல் விற்பனை மறைத்த தொகை : 333,412,176

குவாரி இருப்பு மறைத்தல் : 135,728,000

மொத்தம் - ரூ. 469,140,176

மொத்தம் குவாரியில் வரி ஏய்ப்பு: ரூ. 2,359,933,162

2. சேகர் ரெட்டி - ரூ. 854,575,765

3.குட்கா - ரூ. 24,000,000

4.ஆர்.கே.நகர் தேர்தல் - ரூ.184,096,000

5.விஜயபாஸ்கரின் வீட்டில் பறிமுதல் : ரூ. 2,508,350

ஆக மொத்தம் - ரூ. 3,428,203,277

Also Read: “விஜயபாஸ்கரின் சொத்துகளும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டது ஏன்?” : ஐகோர்ட்டில் வருமான வரித் துறை விளக்கம்!