Tamilnadu
“பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கவேண்டும்”: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளைப் பெற இயலாத நிலை உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி, மாண்புமிகு ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15-11-2022) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நேற்று (14-11-2022) தாம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், செப்டம்பர் 15, 2022 முதல் தொடங்கிய சிறப்புப் (சம்பா / தாளடி / பிசானம்) பருவத்தில், விவசாயிகள் பயிர்க்காப்பீட்டிற்கான பதிவினை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளினால் தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக, பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாததால், பயிர்க் காப்பீட்டிற்கான பதிவினை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை என்றும், அதனைத் தொடர்ந்து இடைவிடாத மழை பெய்து வருவதாலும், வடகிழக்குப் பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை ஆகிய காரணங்களையும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஏற்கெனவே பயிர்க் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 15-11-2022 என்ற காலவரம்பினை, 30-11-2022 வரை நீட்டிக்குமாறு மேற்படி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குறிப்பிட்டுள்ள காரணங்களால், தஞ்சாவூர் (I & II), நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் (I & II), கடலூர், புதுக்கோட்டை (I & II), மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம் (I & II), தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப்படும் இரண்டாம் போக நெல் (சம்பா / தாளடி / பிசானம்) சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவினை 15-11-2022-லிருந்து, 30-11-2022 வரை நீட்டிக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்வதாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!