Tamilnadu

"தலைநிமிர்ந்து சாதனை சொல்ல இவர்தான் காரணம்".. விழா மேடையிலேயே அமைச்சரை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் தமிழக விவசாயிகளின் வாழ்வு மலர்ந்திட உணவு உற்பத்தி பெருகிட மேலும் 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு அரசின் சாதனை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கக் கூடிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கும் நாளாக இது அமைந்திருக்கிறது. ஏற்கனவே ஒரு லட்சம் இணைப்புகளைக் கொடுத்திருக்கிறோம். அத்துடன் சேர்த்து இன்று ஐம்பதாயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இணைப்புகளை பதினைந்து மாத காலத்தில் வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால் இதனை விட மகத்தான சாதனை இருக்க முடியாது. இதற்கு முன் எந்த அரசும் இத்தகைய சாதனையைச் செய்தது இல்லை.

நம்முடைய அரசு தான் செய்து காட்டி இருக்கிறது. இதற்கு முன் இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் இத்தகைய சாதனையைச் செய்தது இல்லை. நம்முடைய அரசு தான் செய்து காட்டி இருக்கிறது.

இந்தச் சாதனையைத் தலைநிமிர்ந்து சொல்ல வைக்கக் காரணமாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மனமார, நான் பாராட்டுகிறேன். அவரை முன்பு நடந்த நிகழ்ச்சிகளில் பாராட்டும் போது டார்க்கெட் வைத்து செயல்படுபவர் என்று நான் குறிப்பிட்டேன்.

தனக்கு ஒரு டார்க்கெட் வைத்துக் கொள்வார்- அந்த டார்க்கெட்டை எப்படியும் முடித்துக் காட்டுவார் செந்தில்பாலாஜி என்று நான் சொன்னேன். நான் சொன்னது அன்று கூட சிலருக்கு புரியாமல் இருந்திருக்கலாம்.அவர்களுக்கும் இன்று புரிந்திருக்கும். ஒரு இலக்கை தனக்குத் தானே வைத்துக் கொண்டு - அந்த இலக்கை முடித்துக் காட்டுபவராக செந்தில்பாலாஜி தன்னை நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.

அவருக்குத் துணை நிற்கும் மின் துறை அதிகாரிகளுக்கும் - அலுவலர்களுக்கும் - நாட்டின் முதலமைச்சர் என்ற அடிப்படையில் மட்டுமல்ல- தமிழக விவசாயிகளின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: மின்சாரத்துறையில் தமிழ்நாடு சாதித்தது என்ன? .. இலவச மின்சாரம் வழங்கும் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர்!