Tamilnadu

பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு.. ‘திதி’ கொடுக்க வந்த இடத்தில் நடந்த சோகம்!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த 5 நாட்களாக பெய்து வருகிறது. பருவமழைக் காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதேவேளையில் வீட்டில் தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களை தவிர்க்கும் படியும், மழைக் காலத்திற்கு முன்பே மின் பழுது ஏதாவது இருந்தால் சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளின் ஒப்புதலுடன் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டது.

அதேபோல் ஈரமாக கையாலே அல்லது எளிதில் மின் சாரம் பாயும் பொருட்களைக் கொண்டு வீட்டில் உள்ள ஸ்விட்களை பயன்படுத்தக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் சிலர் வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் அங்காங்கே மின் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அவல நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த, வெங்கட்ராமன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிர் இழந்தார். இதனை அடுத்து அவருக்கு தாம்பரம் பகுதியில் திதி கொடுப்பதற்காக, துபாயில் வசித்து வந்த வெங்கட்ராமனின் மனைவி கிரிஜா ( 63) அவரது தங்கை ராதா (55) , அவரது தம்பி ராஜ்குமார் (47) , ராஜ்குமாரின் மனைவி பார்கவி (35) மற்றும் அவருடைய மகள் ஆராதனா (6) ஆகியோர் கடந்த இரண்டாம் தேதி ஊரப்பாக்கம் வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஆர்ஆர் பிருந்தாவன், அப்பார்ட்மெண்டில் உள்ள முதல் மாடியில் , தூங்கிக் கொண்டிருந்த பொழுது இன்று அதிகாலை நான்கு மணியளவில் எதிர்பாராத விதமாக, வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்காரணமாக, அதிலிருந்து புகை வெளியேறியத தொடர்ந்து, தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அலறி அடித்து கூச்சலிட்டுள்ளனர். கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த பொழுது மூச்சு திணறி கிரிஜா, ராதா , ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகிய இருவரையும் குரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து கூடுவாஞ்சேரி போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு ஆட்சித்தலைவர் ராகுல்நாத் ஆய்வு செய்கிறார். வீட்டில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “கர்நாடகாவில் ஆதார் இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுப்பு” : கர்ப்பிணி பெண்ணும், இரட்டை குழந்தைகளும் பலி !