Tamilnadu

பெரியார்- அண்ணா- கலைஞராக மூத்த நிர்வாகிகளை பார்க்கிறேன்: கள்ளக்குறிச்சியில் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கள்ளக்குறிச்சியில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தி.மு. க இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் 300 பேருக்குப் பொற்கிழி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து 700 பெண்களுக்கு தையல் இயந்திரமும், 400 பேருக்குச் சலவைப் பெட்டியும், 60 பேருக்கு 3 சக்கர ஸ்கூட்டரும், 500 விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தி.மு.க இயக்கத்தின் முன்னோடிகளான பெரியார், அண்ணா ஆகியோரை நான் நேரில் பார்த்ததில்லை. முத்தமிழறிஞர் கலைஞரோடு இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது இந்த மூன்று பேரும் இல்லை. அவர்களின் மறு உருவமாகத் தான் நமது இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளைப் பார்க்கிறேன். மூத்த நிர்வாகிகளைக் கவுரவிப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. எனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கௌதமசிகாமணி எப்படிப் பெறும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தீர்களோ அதேபோல் வரவுள்ள தேர்தலும் நமது வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும். தி.மு.கவின் கோட்டையாக எப்போதும் கள்ளக்குறிச்சி இருந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”விளையாட்டுத் துறையில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவோம்”: அமைச்சர் மெய்யநாதன் உறுதி!