Tamilnadu

“ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் கீதா ஜீவன்” : நெகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள்!

தீபாவளி பண்டிகை தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி கொண்டாடும் நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தீபாவளி கொண்டாடுவது என்பது கேள்விக்குறி தான்.

அதிலும் ஆதவற்றோர் ஆசிரமங்களில் தங்கி இருக்க கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி என்பது தெரியாத நிலைதான் இந்த நிலையில், தூத்துக்குடியை அடுத்துள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அமைந்துள்ள அன்பு ஆசிரமத்தில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கி உள்ளனர்.

இவர்கள் இந்த தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாட்டில் அங்குள்ள அனைத்து மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள், காலை மாலை இரவு என மூன்று வேளையும் வழங்கினார்.

அதுமட்டுமின்றி தீபாவளி திருநாளை மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் கொண்டாடும் வகையில் மனநலம் பாதிக்கப்பட்டவருடன் இணைந்து அமைச்சர் கீதா ஜீவன் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்.

இது தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. உற்சாகமாக பாடலுக்கு நடனமாடிய மாற்றுத்திறனாளிகளை அமைச்சர் கீதா ஜீவன் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் அரசாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு திகழ்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் எட்டு நகரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் மையங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் அன்பு ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Also Read: கனிமொழி MP, அமைச்சர் கீதாஜீவனுக்கு கடிதம் அனுப்பிய அரசு பள்ளி மாணவ மாணவிகள்.. நெகிழ்ச்சி சம்பவம்!