Tamilnadu

நன்கொடை வாங்குவதில் தகராறு: இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் - பா.ஜ.க நிர்வாகி உட்பட 5 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருள்புரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவர் இந்து முன்னணி கட்சியின் ஒன்றிய குழு பொதுச்செயலாளராக உள்ளார். அதேபகுதியில் வசித்து வரும் பா.ஜ.க பல்லடம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் குருமூர்த்தி மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ராஜசேகர் நன்கொடை கேட்டு குருமூர்த்தி மொபைல் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் வேலை செய்யும் நபர் பணம் தர மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ராஜசேகர் கடையின் கண்ணாடிகளை உடைத்து அந்த நபரையும் தாக்கினார். இது குறித்து குருமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் போலிஸார் ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இதனையடுத்து முன்பகை காரணமாக நேற்று மதியம் குருமூர்த்தி மற்றும் அவரது நண்பர்களான ரகுமான், கிஷோர், புகழ், அனிருத், சந்திரமோகன், லோகேஷ், பிரவின் ஆகியோர் 10 கொண்ட கும்பல் உப்பிளிபாளையம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ராஜசேகரை வழிமறித்து கொலை வெறியுடன் சரமாரியாக தாக்கினர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் ராஜசேகரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பல்லடம் போலிசாருக்கும் தகவல் அளித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் குருமூர்த்தி உட்பட அவரது நண்பர்கள் புகழ், கிருஷ்ணா, சந்தோஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாகியுள்ள மீதுமுள்ள நபர்களை பல்லடம் போலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.தாக்குதலின் போது அப்பகுதியை சேர்ந்த ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: ஹரியானா : நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.. விநாயகர் சிலை கரைப்பின் போது நிகழ்ந்த சோகம்!