Tamilnadu
ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு.. அதிகாரத்தை கையில் எடுத்த காவல்துறை- அருணா ஜெகதீசன் Report
தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விரிவான விசாரணை நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பின்னந்தலை வழியாக குண்டு துளைத்து, முன் தலை வழியாக வெளியேறியுள்ளது. சிலருக்கு முதுகின் பின்பகுதியில் குண்டு துளைத்து, இதயம் போன்ற முக்கிய பகுதியை சிதைத்து மார்பின் முன்பகுதி வழியாக வெளியேறியுள்ளது.
அதேபோல் ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இடுப்புக்கீழே யாரையும் சுடவில்லை. அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடமையிலிருந்து தவறியதாலும், அலட்சியமான நடவடிக்கையே , துப்பாக்கிச்சூட்டின் அடித்தளமாக இருந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களை பார்த்து கொண்டிருந்தவர்களை நோக்கி, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் மகேந்திரனின் உத்தரவின் பேரில், சுடலைக்கண்ணு என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
உயர் அதிகாரிகளுக்குள்ளே ஒருங்கிணைப்பு இல்லாததால் அடுத்து நடக்கவிருக்கும் சம்பவத்தை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இல்லாமல் இருந்துள்ளனர். அப்போதைய காவல் துறை தலைவர் சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறை துணை தலைவர் அவராகவே அதிகாரத்தை கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. ஒவ்வொரு உயர் அதிகாரிகளும் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு தொடர்பான உத்தரவு மற்ற அதிகாரிகளுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்கை செய்யவில்லை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 10 லட்சமும் வழங்க வேண்டும். அதேபோல், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.
Also Read
-
“குறுவைப்பருவத்தில் 1,45,634 விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
பள்ளிக்கரணை சதுப்புநிலம் - கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
“சென்னையில் இதுவரை 5.38 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!
-
உரத் தேவையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை தேவை! : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!