Tamilnadu

”உயிரோடு இருப்பவர்களுக்கு என் மகன் உதவட்டும்”... மூளைச் சாவு அடைந்த இளைஞரின் பெற்றோர் உருக்கம்!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பள்ளத்தூர் அருகே உள்ள மோட்டுக் கொட்டாய் கிராமத்தைச் சார்ந்த கமலநாதன்-வெண்ணிலா தம்பதியரின் மூத்த மகன் திவாகர். இவர் பொறியியல் படித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜோலார்பேட்டையில் தனது நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகத் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி அருகிலிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் திவாகரன் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் திவாகரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திவாகர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து திவாகரன் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் பெற்றோர் முடிவு செய்தனர்.

பின்னவர் திவாகரின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது திவாகரின் பெற்றோர் கூறுகையில், "என் மகன் உயிருடன் இல்லை என்றாலும், அவனுடைய உடல் உறுப்புகள், உயிரோடு இருப்பவர்களுக்கு, உயிர் வாழ உதவட்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் விபத்துகளில் மூளைச் சாவு ஏற்படுகின்றவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெற அரசு முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: துப்பாக்கி குண்டு v/s பெட்ரோல் குண்டு.. அ.தி.மு.க, பா.ஜ.க-வின் வன்முறை அரசியலை நையாண்டி செய்த சிலந்தி!