Tamilnadu

“மண்ணெண்ணெய் பாட்டில் வீசிவர்கள் மீது நடவடிக்கை - சில உண்மைக் குற்றவாளிகள் கைது” : DGP எச்சரிக்கை!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்” என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் இச்சோதனையின்போது 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 1410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது வரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நூறு நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யட்டுள்ளன.

கோவை மாநகரில் RAF இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர், திரு.பி.தாமரைக்கண்ண ன், இ.கா.ப., அங்கு முகாமிட்டுள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: கோவை: அதிரடி காட்டும் தலைமைச் செயலாளர் - தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை ; போலிஸ் எச்சரிக்கை!