Tamilnadu

கலைஞருக்கான பூம்பொழில் இல்லம் சட்டப் பல்கலைக்கழகமாக மாறியது எப்படி?.. மாணவர்களுக்கு நினைவூட்டிய முதல்வர்!

1989-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக்கல்லூரிக்கு, 'டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று பெயர் சூட்டியவர்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள். 1997-ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் கலைஞர்தான். அத்தகைய பல்கலைக்கழகத்திற்குத்தான், இன்றைக்கு நாம் வெள்ளிவிழாவை எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

இன்னொரு முக்கியமான செய்தியை உங்களிடத்தில் நான் சொல்லியாக வேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தேவையான இடத்தைத் தேர்வு செய்வது சற்று கடினமாக இருந்தது, அப்போது நடந்த நிகழ்வை, நான் இங்கு உங்கள் அனைவருக்கும் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களது இல்லம் கோபாலபுரத்தில் இருக்கிறது. முதலமைச்சராக இருந்தபோது அந்த இல்லத்தில் தான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆக, அந்த கோபாலபுரம் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்தத் தெருவில் நான்கைந்து கார்கள் கூட நிற்க இடம் இருக்காது, ஏனென்றால், அது நெருக்கமான இடம், போக்குவரத்துக்கு இடையூறாக ஆகிவிடும்.

அப்படிப்பட்ட முதலமைச்சராக இருக்கக்கூடிய கலைஞர் அவர்களுக்கு, வசதியாக இல்லம் இருக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளெல்லாம் முடிவு செய்து, அரசின் சார்பில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூம்பொழில் இல்லத்தில் பல வசதிகளெல்லாம் செய்து அந்த இடத்தை முதலமைச்சராக இருக்கும் கலைஞர் அவர்களுக்கு அந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். கலைஞரிடத்தில் சென்று இந்த ஆலோசனையைச் சொன்னார்கள்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இடம் தேடப்பட்டு வந்தது. உடனடியாக பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டும் என்ற சூழ்நிலை. அதற்கு உடனடியாக கட்டடம் கட்டுவது என்றால் காலம் ஆகும், நேரமாகும், காலம் விரயம் ஆகும். எனவே, கலைஞர் உடனே ஒரு அறிவிப்பு செய்தார். தான் குடியேற இருந்த, குடியேறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட பூம்பொழில் இல்லத்தை, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்து, அன்றைக்கு உத்தரவிட்டவர்தான் நம்முடைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். ஆக, தன்னலம் கருதாது பொதுநல நோக்கில் பல்கலைக்கழகம் துவங்கிட, செயல்பட வழிவகை செய்தவர் கலைஞர் அவர்கள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: சமூகநீதியை நீங்கள் நிலைநாட்ட வேண்டும்.. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதலமைச்சர் பேச்சு!